LATEST NEWS
“600 மருத்துவ இடங்கள் அவுட்!.. பின்னணியில் இருப்பது யார்?.. அமைச்சரிடம் அண்ணாமலை கேட்ட ஒற்றை கேள்வி.. ஆடிப்போன கோட்டை வட்டாரம்”…!!
தமிழகத்தின் தனலட்சுமி ஸ்ரீனிவாசன், ஸ்ரீனிவாசன், கற்பக விநாயகா, செயின்ட் பீட்டர்ஸ் ஆகிய 4 தனியார் மருத்துவக் கல்லூரிகள் மத்திய அரசால் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த அதிரடி மாற்றத்தின் காரணமாக, அங்குள்ள 600-க்கும் மேற்பட்ட மருத்துவ இடங்கள், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு மற்றும் மாநில அரசின் பொது ஒதுக்கீட்டு விதிகளின் கீழ் நீடிக்குமா என்ற பலத்த கேள்வி எழுந்துள்ளது. வாட்ஸ்அப் வழி புறநோயாளிகள் முன்பதிவு சேவையைத் தொடங்கி வைத்த மாநில சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ், தற்போதைய சூழலில் இந்த அரசு மருத்துவ இடங்கள் பறிபோகும் அபாயம் இருப்பதை ஒப்புக்கொண்டுள்ளார். இந்த விவகாரம் பூதாகரமாகியுள்ள நிலையில், ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பைச் சேர்ந்த அண்ணாமலை தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் தமிழக அரசை நோக்கிக் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளார்.
இந்தக் கல்லூரிகளுக்குத் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் தடையில்லாச் சான்றிதழ் தராதபோது, பல்கலைக்கழக மானியக் குழு விதிகளின்படி 60 நாட்களுக்குள் மாநில அரசு ஏன் அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மாணவர்களின் பாதிப்பைத் தாமதமாக உணர்ந்து, தற்போது நீதிமன்றத்தை நாடப்போவதாக அறிவித்துள்ள தமிழக வெற்றிக் கழக அரசின் முடிவை வரவேற்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரசுப் பள்ளி ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவை நேரடியாகப் பாதிக்கும் இந்த 650 இடங்கள் கைநழுவிப் போனதற்கு, அதிகாரிகளின் அலட்சியமா அல்லது பின்னணியில் இருந்த அரசியல் அழுத்தமா என்பதே தற்போதைய பிரதான விவாதமாக உள்ளது. வெறும் நீதிமன்ற வழக்குகளோடு நிறுத்தாமல், இந்த நிர்வாகத் தவறுக்குக் காரணமான அதிகாரிகள் யார் என்பதை வெளிப்படையான விசாரணை மூலம் கண்டறிய வேண்டும் என்றும், தவறிழைத்தவர்கள் மீது கடுமையான துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
