LATEST NEWS
ரீல்ஸ் சர்ச்சையில் சிக்கிய அமைச்சர் கீர்த்தனா… அமைச்சர்கள் இப்படி செய்வது பொது ஒழுங்கிற்கு கேடு.. கொந்தளித்த திருமாவளவன்..!!
அரசு பள்ளி மாணவி ஒருவரின் ஆங்கில திறனை தவெக அமைச்சர் கீர்த்தனா ஆய்வு செய்த ‘ரீல்ஸ்’ வீடியோ அண்மையில் சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவில் மாணவியிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்குப் பின்னால் இருந்த அணுகுமுறையும் விவாதப் பொருளாக மாறியுள்ளன. இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்திலும் பொதுமக்களிடையேயும் தற்போது பேசுபொருளாகியுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள விசிக தலைவர் திருமாவளவன், அமைச்சர்களும் அதிகாரிகளும் தங்களின் அரசுப் பணிகளின் போது செல்லும் இடங்களிலெல்லாம் ரீல்ஸ் போடுவது தற்போது இந்தியா முழுவதும் ஒரு வாடிக்கையான விஷயமாக மாறிவிட்டது என்று சுட்டிக்காட்டியுள்ளார். விளம்பர நோக்கங்களுக்காக இத்தகைய காணொளிகள் எடுக்கப்படுவது அதிகரித்துள்ளதை அவர் தனது பேட்டியில் வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும், இதுபோன்ற ரீல்ஸ்கள் பொது ஒழுங்கிற்கு கேடாக அமைந்தால், அதனை தகுந்த முறையில் தாங்கள் சுட்டிக்காட்டுவோம் என்றும் அவர் கூறினார். அவ்வாறு சுட்டிக்காட்டப்படும் தவறுகளையும் விமர்சனங்களையும் அமைச்சர்கள் சரியான முறையில் புரிந்து கொண்டு தங்களை மாற்றிக் கொள்வார்கள் என நம்புவதாகவும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
