LATEST NEWS
ஏற்கனவே வெள்ளம்… இப்போது 900 பாம்புகள்..! நரகமாய் மாறிய சீனா… சீன கிராமங்களைச் சூழ்ந்த புதிய ஆபத்து..!!
தெற்கு சீனாவின் குவாங்சி மாகாணத்தில் அண்மையில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளத்தின் போது, அங்கு செயல்பட்டு வந்த ஒரு பெரிய பாம்புப் பண்ணை முற்றிலும் தண்ணீரில் மூழ்கி அடித்துச் செல்லப்பட்டது. இதன் காரணமாக, அந்தப் பண்ணையில் வளர்க்கப்பட்டு வந்த சுமார் 900 பாம்புகள் தப்பித்து வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டு, அருகில் உள்ள குடியிருப்புப் பகுதிகள் மற்றும் கிராமங்களுக்குள் புகுந்துள்ளன. ஏற்கனவே வெள்ளப் பாதிப்பால் தவித்து வரும் அப்பகுதி மக்கள், தற்போது இந்த பாம்புகளின் நடமாட்டத்தால் பெரும் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
வெள்ள நீரில் தப்பிய இந்த 900 பாம்புகளில் மூன்று முக்கிய வகைகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. அவை நாகப்பாம்புகள், கிங் ரேட் பாம்புகள் மற்றும் தண்ணீர்ப் பாம்புகள் ஆகும். இவற்றுள் நாகப்பாம்புகள் மட்டுமே அதிக நச்சுத்தன்மை கொண்டவை. தப்பித்த பாம்புகள் கிராமங்களுக்குள் புகுந்து சிலரை கடித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், இவற்றில் பெரும்பாலான பாம்புகள் நீண்ட நேரம் தண்ணீரில் இருப்பதால் விரைவில் இறந்துவிடக்கூடும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர்.
பாம்புகள் கிராமத்துச் சாலைகளிலும், வீடுகளுக்கு அருகிலும் ஊர்ந்து செல்வதை உள்ளூர் மக்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர். இந்தச் சூழலில், பொதுமக்கள் யாரும் இந்த பாம்புகளைத் தாங்களாகவே பிடிக்கவோ அல்லது நெருங்கவோ வேண்டாம் என்று உள்ளூர் நிர்வாகம் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. மீட்புக் குழுவினர் மற்றும் பாம்புப் பிடி வல்லுநர்கள் தீவிரமாகச் செயல்பட்டு, தப்பிய பாம்புகளைத் தேடிப் பிடிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
