LATEST NEWS
“நோ அட்வான்ஸ், நோ சேலரி ஸ்லிப்… ஒன்லி நியூமராலஜி..!” வாடகை வீட்டின் புது ரூல்ஸ்… மும்பை வீட்டு உரிமையாளரின் அலும்புகள்..!!
மும்பையில் வாடகைக்கு வீடு தேடும் பெண்ணொருவருக்கு, அவரது எண்கணித எண் வீட்டின் உரிமையாளரின் எண்கணித எண்ணோடு பொருந்தவில்லை என்ற விசித்திரமான காரணத்திற்காக வீடு மறுக்கப்பட்ட சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. பொதுவாக மும்பை போன்ற பெருநகரங்களில் அதிக முன்பணம் அல்லது உணவுப் பழக்கவழக்கங்கள் காரணமாக வீடு கிடைப்பதில் சிரமம் ஏற்படும். ஆனால், இந்த முறை முற்றிலும் வித்தியாசமாக எண்கணித ஜோதிடத்தை அடிப்படையாகக் கொண்டு பெண் ஒருவருக்கு வீடு மறுக்கப்பட்டிருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த விசித்திரமான சம்பவத்தை சமூக ஊடகப் பிரபலமும் கலைஞருமான வாக்மிதா சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாகப் பகிர்ந்து வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளார். மும்பையில் வாடகைக்கு வீடு தேடிச் சென்ற தனது தோழியிடம், அங்கிருந்த படித்த, நாகரீகமான பெண்மணி போல் தெரிந்த வீட்டின் உரிமையாளர், “உங்களுடைய எண் என்ன?” என்று கேட்டுள்ளார். முதலில் அது தொலைபேசி எண் என்று நினைத்த அந்தப் பெண்ணுக்கு, அதன் பிறகுதான் அது எண்கணித ஜோதிட எண் என்ற உண்மை தெரியவந்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
https://www.instagram.com/reel/DaVnooRy4VL/?utm_source=ig_web_button_share_sheet
அந்த வீட்டின் உரிமையாளர் தனது கணக்கீட்டின்படி, வீட்டின் எண் ‘4’ என்றும், வாடகைக்கு கேட்க வந்த பெண்ணின் எண்கணித எண் ‘7’ என்றும் கூறியுள்ளார். இந்த 4 மற்றும் 7 ஆகிய எண்களின் சேர்க்கை வாஸ்து அல்லது ஜோதிட ரீதியாக அந்த வீட்டிற்கு செட் ஆகாது எனக் கூறி, அந்தப் பெண்ணுக்கு வீடு தர மறுத்துவிட்டார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, நெட்டிசன்கள் பலரும் “மும்பையில் இப்போது வீட்டின் உரிமையாளர்கள் மட்டுமல்ல, டாரட் கார்டு படிப்பவர்களும் ஜோதிடர்களும்தான் வாழ்கிறார்கள்” என்றும், “படித்தவர்களுக்கும் மூடநம்பிக்கைக்கும் சம்மந்தமில்லை” என்றும் கமெண்ட் செய்து கிண்டலடித்து வருகின்றனர்.
