LATEST NEWS
“அதிமுகவுக்குத் திரும்பும் சசிகலா, டிடிவி தினகரன்?.. முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் போட்ட திடீர் குண்டு.. பரபரக்கும் அரசியல் களம்..!!
ஈரோடு மாநகர மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் ஆலோசனைக் கூட்டத்தில், முன்னாள் அமைச்சரும் தற்போதைய எம்.எல்.ஏ-வுமான கே.சி. கருப்பணன் கலந்துகொண்டு பேசினார். அப்போது, சொத்துகளைக் காப்பாற்றவும், வழக்குகளில் இருந்து தப்பிக்கவும், சுயநல ஆசைக்காகவுமே அதிமுகவில் இருந்த சிலர் தமிழக வெற்றிக் கழகத்திற்குச் சென்றுள்ளதாகக் குற்றம் சாட்டினார். மேலும், பிரிந்து சென்ற டிடிவி தினகரன் மற்றும் சசிகலா ஆகியோர் மீண்டும் அதிமுகவில் இணைவதற்குப் பிரகாசமான வாய்ப்புகள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதனை தொடர்ந்து அதிமுகவில் இருந்து தவெக-வுக்குச் சென்ற முன்னாள் அமைச்சர்கள் பலர் மீண்டும் தாய் கழகத்திற்கே திரும்ப வாய்ப்புள்ளது என்று கூறினார். மேலும் 18 முதல் 25 வயது வரையிலான இளைஞர்கள் தவெக-வுக்கு வாக்களித்துள்ளதைச் சுட்டிக்காட்டினார். தவெக வேட்பாளர்கள் குறைந்த வாக்குகள் பெறுவார்கள் என்ற கணக்கு தப்பலாகிவிட்டதாக ஒப்புக்கொண்ட அவர், தவெக குதிரை பேரத்தில் ஈடுபடாமல் இருந்தால் எப்படி அதிமுக எம்.எல்.ஏ-க்கள் பதவி விலகிய உடனே தவெக-வில் இணைவார்கள் என்று கேள்வி எழுப்பினார். சோதனையான இக்காலத்தில் அதிமுக தொண்டர்கள் அனைவரும் பொதுச் செயலாளருக்குத் துணையாக நிற்க வேண்டும் என்றும் நிர்வாகிகள் இக்கூட்டத்தில் கேட்டுக்கொண்டனர்.
இக்கூட்டத்தில் பேசிய ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளர் ஏ.கே. செல்வராஜ், தேர்தல் நேரத்தில் கட்சியின் முக்கிய அமைப்பான தொழிற்சங்கத்தினரைத் தீவிரமாகப் பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், கோடிகளைச் சம்பாதித்த சிலர் பயந்து ஓடினாலும், தொண்டர்கள்தான் தலைவர்களை உருவாக்குகிறார்கள் என்பதால் கவலைப்படத் தேவையில்லை என்றார். அதிமுக அல்லது திமுக இன்னும் ஒரு 10 இடங்களில் கூடுதலாக வெற்றி பெற்றிருந்தால் விஜய் ஆட்சிக்கு வந்திருக்க முடியாது என்றும், தவெக அரசு ஆறு மாதங்களைக் கூடத் தாங்காது என்பதால் எப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம் என்றும் அவர் தொண்டர்களிடம் பேசினார்.
