LATEST NEWS
BREAKING: முதல்வர் விஜய் குறித்து அவதூறு கருத்து பதிவு… 2 பேர் அதிரடி கைது..!!
தமிழக முதல்வர் ச.ஜோசப் விஜய் குறித்து முகநூலில் அவதூறான கருத்துகளைப் பதிவிட்ட விவகாரத்தில், திமுகவைச் சேர்ந்த விஷ்ணுபிரபு (36) மற்றும் மனோஜ்குமார் (37) ஆகிய இருவரை கோவை மதுக்கரை போலீசார் திருச்சியில் வைத்து அதிரடியாகக் கைது செய்துள்ளனர். கோவை மாவட்டம் மதுக்கரை குரும்பபாளையம் பகுதியைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழகத்தின் 8-ஆவது வார்டு செயலாளர் பாலாஜி என்பவர் அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் ரேஷன் கடை திறப்பு விழா தொடர்பாகப் பேனர் வைப்பதில் திமுக மற்றும் தவெக ஆகிய இரு தரப்பினரிடையே ஏற்கனவே மோதல் போக்கு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தை முன்னிறுத்தி முதல்வர் விஜய் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பிய நபர்கள் திருச்சியில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்த தனிப்படை போலீசார், குரும்பபாளையம் அண்ணா நகரைச் சேர்ந்த சென்ட்ரிங் ஒப்பந்ததாரர் விஷ்ணுபிரபு மற்றும் ஓட்டுநர் மனோஜ்குமார் ஆகிய இருவரையும் கைது செய்து கோவைக்கு அழைத்து வந்தனர். பின்னர் அவர்கள் இருவரும் மதுக்கரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய தலைமறைவாக உள்ள மணிகண்டன் உள்ளிட்ட சிலரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
