LATEST NEWS
6 மாசம் தான் டைம்… உடனே பதவியிலிருந்து தூக்கிருவோம்… வழக்கறிஞர் நியமன விவகாரத்தில் கோடிகள் கைமாறியதா..? அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமாரின் அதிரடி ‘செக்’..!!!
தமிழக வெற்றிக் கழக அரசின் வழக்கறிஞர்கள் நியமனங்களில் தகுதி அடிப்படையில் மட்டுமே தேர்வு நடக்கும் என்று கூறப்பட்ட நிலையில், பல கோடிகள் கைமாறியுள்ளதாக கட்சியின் மாநில வழக்கறிஞர் பிரிவுக்குள்ளேயே கடுமையான அதிருப்தி எழுந்துள்ளது. இந்த விவகாரம் தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்காகவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சில முக்கிய அமைச்சர்கள் மற்றும் அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு நெருக்கமான வக்கீல்களுக்குப் பதவிகள் வழங்கப்பட்டதில், ஆளும் தவெக-வை விட திமுக, அதிமுக மற்றும் பாஜக போன்ற எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த வழக்கறிஞர்களின் பெயர்களே அதிகளவில் இருப்பதாகக் கட்சித் தலைமைக்கு ரகசியப் புகார்கள் சென்றுள்ளன.
சென்னையில் இந்த நியமனங்களை ஒருங்கிணைத்த தவெக-வின் மாநில வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த முக்கியப் புள்ளி ஒருவர், கோடிக்கணக்கில் பணம் வாங்கியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க, சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி, நியமிக்கப்பட்டுள்ள அனைத்து வழக்கறிஞர்களின் செயல்பாடுகளும் அடுத்த 6 மாதங்களுக்குத் தீவிரமாகக் கண்காணிக்கப்படும் என்றும், தகுதி மற்றும் நேர்மை இல்லாதவர்கள் எவ்விதப் பரிந்துரையுமின்றி உடனடியாகப் பதவியிலிருந்து நீக்கப்படுவார்கள் என்றும் எச்சரித்துள்ளார்.
