LATEST NEWS
“ஐயோ கார் போச்சே…!” போட்டோ எடுக்கப் போய் டோட்டல் டேமேஜ்..! வைரலாகும் குரேஸ் பள்ளத்தாக்கு விபத்து..!!
ஜம்மு-காஷ்மீரின் எழில் கொஞ்சும் குரேஸ் பள்ளத்தாக்கில், சுற்றுலாப் பயணிகள் சிலர் தங்களது வெள்ளை நிற காரை சாய்வான மலைப்பாதையில் நிறுத்திவிட்டு புகைப்படம் எடுக்க இறங்கியுள்ளனர். அவர்கள் இறங்கிய சில நிமிடங்களிலேயே, அந்த கார் திடீரென பின்னோக்கி நகரத் தொடங்கியது. கார் வேகம் எடுப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சுற்றுலாப் பயணிகள், அதை நிறுத்த பதறியடித்துக்கொண்டு பின்னாடியே ஓடினர். ஆனால், அவர்களின் முயற்சி பலனின்றி கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரமிருந்த ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்தது. நல்வாய்ப்பாக கார் கீழே விழும்போது அதற்குள் யாரும் இல்லாததால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.
இந்த பதைபதைக்க வைக்கும் ஒட்டுமொத்த சம்பவமும் வீடியோவாகப் பதிவு செய்யப்பட்டு, தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. நிக்கில் சைனி என்ற பயனர் இந்த வீடியோவை எக்ஸ் தளத்தில் பகிர்ந்து, மலைப்பகுதிகளில் வாகனங்களை நிறுத்தும்போது கவனமாக இருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார். “டயர்களுக்குப் பின்னால் வைக்கப்படும் ஒரு சிறிய கல் கூட உங்கள் காரைக் காப்பாற்றக்கூடும்; எனவே ஆபத்தான இடங்களில் வெறும் புகைப்படத்திற்காக வாகனங்களை நிறுத்த வேண்டாம்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இணையவாசிகள் பலரும் இந்த காட்சியைப் பார்த்து “மிகவும் பயமுறுத்தும் வகையில் உள்ளது” எனப் பதிவிட்டு வருகின்றனர்.
இந்த விபத்து, மலைப்பாதைகளில் வாகனங்களை எவ்வாறு பாதுகாப்பாக நிறுத்த வேண்டும் என்ற விவாதத்தை இணையத்தில் உருவாக்கியுள்ளது. காரை நிறுத்தியபோது ஹேண்ட்பிரேக்கை சரியாகப் பயன்படுத்தாததே கார் பின்னோக்கி நகரக் காரணம் எனப் பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர். மேலும், சாய்வான மலைப் பகுதிகளில் காரை நிறுத்தும்போது மேனுவல் காராக இருந்தால் அதை கியரில் போடுவது மற்றும் டயர்களின் பின்னே சக்கரத் தடைகள் அல்லது பெரிய கற்களை முட்டுக் கொடுப்பது போன்ற அடிப்படைப் பாதுகாப்பு விதிகளையும், மலைப்பாதைகளில் வாகனம் ஓட்டுவதற்கான நுட்பங்களையும் பயணிகள் கண்டிப்பாகத் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் அறிவுறுத்துகின்றனர்.
