LATEST NEWS
“ஜம்மு காஷ்மீரில் பருவமழை கோரத்தாண்டவம்…! தோடாவில் கனமழைக்கு இடையே… பயணிகள் பேருந்து மீது உருண்டு விழுந்த பிரம்மாண்ட பாறை..! ஒருவர் பலி, பலர் படுகாயம்..!!”
ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாகப் பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளது. ஜம்மு-கிஷ்ட்வார் தேசிய நெடுஞ்சாலையில் ராகி நாலா பகுதி அருகே பயணித்துக் கொண்டிருந்த பயணிகள் பேருந்து ஒன்றின் மீது, மலையிலிருந்து சரிந்து விழுந்த பிரம்மாண்ட பாறை மோதி விபத்துக்குள்ளானது. காலை 9.30 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.தொடர் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் பாறைச் சரிவு காரணமாகவே இக்கொடூர விபத்து நிகழ்ந்துள்ளது.
இவ்விபத்தில் பேருந்திலிருந்த பயணிகள் சிலர் இடிபாடுகளுக்குள் சிக்கிப் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினரும் காவல்துறையினரும் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்களைப் பேருந்திலிருந்து மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலும் தீவிர சிகிச்சைக்காகவும் அனுமதித்த நிலையில், ஒருவர் உயிரிழந்தார்; மேலும் பல பயணிகள் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஜம்மு காஷ்மீர் பகுதியில் தீவிரமடைந்துள்ள பருவமழை காரணமாகப் பல இடங்களில் வெள்ளப்பெருக்கும் நிலச்சரிவுகளும் ஏற்பட்டு போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மோசமான வானிலை தொடர்ந்து நீடித்து வருவதால், மலைப்பாங்கான அபாயகரமான சாலைகளில் பயணிக்கும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
