LATEST NEWS
வாய் சவுடால் விடாதீங்க… தைரியம் இருந்தா வெள்ளை அறிக்கை வெளியிடுங்க பாஸ்… விஜய் அரசுக்கு செந்தில்பாலாஜி விடுத்த பகிரங்க சவால்..!!
தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசு 100 நாட்களைக் கடந்த நிலையிலும், மக்களுக்கு எந்தவித நன்மையும் செய்யாத ஒரு முடங்கிய அரசாகவே செயல்பட்டு வருவதாக திமுக முன்னாள் அமைச்சர் வி. செந்தில் பாலாஜி மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தற்போதைய தவெக அரசின் நிர்வாகத் திறமையின்மையையும், மக்கள் நலத் திட்டங்களில் காட்டி வரும் அலட்சியப் போக்கையும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளாக முன்வைத்துப் பேசினார்.
குறிப்பாக, தற்போதைய சட்டமன்றக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் எழுப்பும் மக்கள் நலன் சார்ந்த முக்கியக் கேள்விகளுக்குப் பதிலளிக்கத் தெரியாமல் தவெக அமைச்சர்கள் பேரவையில் திணறி வருவதாக அவர் சாடியுள்ளார். அரசு நிர்வாகம் மற்றும் துறைகள் சார்ந்த அடிப்படை விவரங்கள் கூடத் தெரியாமல் அமைச்சர்கள் தடுமாறுவது, இந்த ஆட்சியின் நிர்வாகத் தோல்வியையே காட்டுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், தவெக அரசு தொடர்ந்து கூறி வரும் ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்துப் பேசிய அவர், தவெகவிடம் உண்மையான ஆதாரங்கள் இருந்தால் மட்டுமே அவர்களால் ஊழல் குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட முடியும் என்று கூறினார். “தைரியம் இருந்தால், வெறும் பேச்சோடு நிறுத்தாமல் அதற்கான ஆதாரங்களை மக்கள் முன்னிலையில் வெளியிட வேண்டியதுதானே?” என்று தவெக அரசுக்குச் செந்தில் பாலாஜி நேரடியான அரசியல் சவாலையும் விடுத்துள்ளார்.
