LATEST NEWS
நிஜ உலக ஸ்பைடர்மேன்..!! பிவண்டி வெள்ளத்தில் உதித்த புதிய சூப்பர் ஹீரோ..! இன்ஸ்டாகிராமில் லைக்ஸ்களை அள்ளும்.. வைரல் வீடியோ..!!
மகாராஷ்டிராவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ள பாதிப்புகளுக்கு இடையே, பிவண்டி பகுதியைச் சேர்ந்த ஷதாப் என்ற இளைஞர் நிஜ வாழ்க்கையில் ஒரு சூப்பர் ஹீரோவாக மாறி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். அங்குள்ள சாலைகளில் மழைநீர் தேங்கி, போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டபோது, மாநகராட்சி ஊழியர்கள் யாரும் உதவ வராததால் அவர் களத்தில் இறங்கினார். மக்கள் படும் அவதியைக் கண்டு சும்மா இருக்க முடியாத அவர், ஒரு ஸ்பைடர்மேன் உடைகளை அணிந்துகொண்டு வெள்ளம் சூழ்ந்த தெருக்களுக்கு வந்து மக்களுக்கு உதவத் தொடங்கினார்.
திரைப்படங்களில் ஸ்பைடர்மேன் கதாபாத்திரம் எப்படி பிறருக்கு உதவி செய்து உயிர்களைக் காப்பாற்றுகிறதோ, அதேபோல நிஜ வாழ்க்கையிலும் மக்களுக்கு உதவ வேண்டும் என்ற உத்வேகத்துடன் இந்த உடையில் வந்ததாக ஷதாப் தெரிவித்துள்ளார். அவர் தண்ணீரில் நின்றபடி வாகனங்களைச் சீராக வழிநடத்தியதோடு, சாலைகளில் தேங்கிக் கிடந்த தண்ணீரை அப்புறப்படுத்தவும் உதவினார். அதோடு நில்லாமல், அந்த இக்கட்டான சூழலிலும் சாலையைக் கடந்து சென்ற பொதுமக்களுக்கு கை குலுக்கியும், ‘ஹை-பைவ்’ கொடுத்தும் அவர்களின் முகத்தில் புன்னகையை வரவழைத்தார்.
மழையில் நனைந்தபடி இந்த இளைஞர் செய்த தன்னலமற்ற சேவையின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள், “ஸ்பைடர்மேன்: இந்தியா சாப்டர்” என்றும், சுயநலம் மிகுந்த இந்த உலகத்தில் எந்தப் பிரதிபலனும் எதிர்பாராமல் உதவும் இவரைப் போன்றவர்கள் ஒரு அரிய வகை என்றும் பாராட்டி வருகின்றனர். மகாராஷ்டிராவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த இளைஞரின் செயல் பலருக்கும் மனிதநேயத்தின் மீதான நம்பிக்கையை வரவழைத்துள்ளது.
