CRIME
உண்மையை மறைத்து 2வது திருமணம்… 3வது பெண்ணுடன் தொடர்பு..!ஆந்திராவில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட இன்ஸ்பெக்டரின் பகீர் லீலைகள்..!
ஆந்திரப் பிரதேச மாநிலம் ஓங்கோல் பகுதியைச் சேர்ந்த அருணா குமாரி என்ற பெண்ணுக்கு கடந்த 2004-ல் திருமணமாகி இரு குழந்தைகள் இருந்த நிலையில், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகத் தனியாக வாழ்ந்து வந்தார். அப்போது உதவிக்காக காவல் நிலையம் சென்றபோது, அங்கு சப்-இன்ஸ்பெக்டராக இருந்த ராமுலு நாயக்குடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. அருணா குமாரியின் சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு அவரிடம் நெருக்கமான ராமுலு நாயக், தனக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்ட உண்மையை மறைத்து, அவரை ஸ்ரீசைலம் என்ற இடத்திற்கு அழைத்துச் சென்று இரகசியமாக இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இதற்கிடையில் ராமுலு நாயக்கிற்கு பதவி உயர்வு கிடைத்து, தெனாலி பகுதியில் காவல் ஆய்வாளராக பொறுப்பேற்றார். பதவி உயர்வு பெற்ற பிறகு அருணா குமாரியைத் தவிர்க்கத் தொடங்கிய ராமுலுவின் நடத்தையில் சந்தேகமடைந்த அருணா குமாரி விசாரித்தபோது, அவருக்கு தெனாலியில் மூன்றாவதாக ஒரு பெண்ணுடன் நெருங்கிய தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனை அருணா குமாரி தட்டிக்கேட்டபோது, ஆத்திரமடைந்த ராமுலு நாயக் ரூ.30 லட்சம் மற்றும் தங்க நகைகளை வாங்கிக்கொண்டு தன்னை விட்டு நிரந்தரமாக விலகிச் செல்லுமாறு மிரட்டியுள்ளார். அதற்கு அருணா குமாரி சம்மதிக்காததால், தெனாலி டிஎஸ்பி-யிடம் புகார் அளித்தார். முதற்கட்ட விசாரணையில் ராமுலு நாயக் குற்றவாளி எனத் தெரிந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்த ராமுலு நாயக், தனது வேலை இழப்பிற்கும் சிறைவாசத்திற்கும் அருணா குமாரியே காரணம் என்று கூறி, அவருக்கும் அவரது குழந்தைகளுக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். மேலும், பழிவாங்கும் நோக்கில் அருணா குமாரியுடன் இருந்த சில மிக நெருக்கமான அந்தரங்க வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரவவிட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பாதிக்கப்பட்ட பெண், தற்போது குண்டூர் எஸ்பி வகுல் ஜிண்டாலை நேரில் சந்தித்து தனக்கும் தன் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு கோரி புகார் அளித்துள்ளார். இந்த விவகாரத்தின் தீவிரத்தை உணர்ந்த எஸ்பி, காவல் துறையின் நற்பெயரைக் கெடுத்த குற்றத்திற்காக ராமுலு நாயக் ஏற்கனவே சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தியதோடு, புதிய புகாரின் அடிப்படையில் அவர் மீது கடுமையான சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
