LATEST NEWS
பள்ளிகளில் புத்தகத் தட்டுப்பாடு ஏன்..? தமிழக அரசு கொடுத்த அதிரடி விளக்கம்..!!
தமிழகத்தில் பள்ளிப் பாடப்புத்தகங்கள் தட்டுப்பாடு நிலவுவதாக எழுந்த புகார்களுக்குப் பள்ளிக்கல்வித்துறைச் செயலாளர் சந்திரமோகன் விளக்கம் அளித்துள்ளார். நடப்புக் கல்வியாண்டிற்கான பாடப்புத்தகங்களை அச்சிடுவதிலோ அல்லது தொடக்கக் கட்ட வினியோகத்திலோ எந்தவிதத் தாமதமும் ஏற்படவில்லை என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார். பள்ளிகள் வழங்கிய தொடக்க கால மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில், அனைத்துப் பாடப்புத்தகங்களும் கல்வியாண்டு தொடங்குவதற்கு முன்பே முறையாக அச்சிடப்பட்டு வழங்கப்பட்டுவிட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு பல்வேறு வகுப்புகளில் கணிசமான அளவில் புதிய மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளது. இந்த எதிர்பாராத கூடுதல் சேர்க்கையைக் கணக்கிட்டு, திருத்தப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில் மாநிலம் முழுவதும் சுமார் 80 ஆயிரம் பாடப்புத்தகங்கள் கூடுதலாகத் தேவைப்படுவது கண்டறியப்பட்டது. எனவே, சில பள்ளிகளில் தற்காலிகமாக ஏற்பட்ட இந்தத் தட்டுப்பாடானது கல்வித்துறையின் திட்டமிடல் குறைபாட்டால் ஏற்பட்டது அல்ல, பள்ளிகள் திறந்தபின் ஏற்பட்ட கூடுதல் மாணவர் சேர்க்கையினால் மட்டுமே உருவானது என்று அரசு விளக்கியுள்ளது.
இந்தக் கூடுதல் தேவையை உணர்ந்த உடனேயே, கல்வித்துறை விழிப்புடன் செயல்பட்டு 80 ஆயிரம் கூடுதல் புத்தகங்களையும், அதற்குத் தேவையான பயிற்சிப் புத்தகங்களையும் அச்சிடும் பணியை விரைந்து முடித்துள்ளது. தற்போது இந்தப் புத்தகங்களைச் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு வினியோகிக்கும் இறுதிக்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. புதிதாகச் சேர்ந்த மாணவர்கள் உட்பட தகுதியுள்ள அனைத்து மாணவர்களுக்கும் தேவையான பாடப்புத்தகங்கள் முழுமையாகக் கிடைப்பது விரைவில் உறுதி செய்யப்படும் எனப் பள்ளிக்கல்வித்துறை உறுதியளித்துள்ளது.
