LATEST NEWS
7 வருச கோமா.. கால்களை கடித்த மனைவி..! கண் விழித்த கணவன் சொன்ன அந்த ‘3 வார்த்தை’..! என்ன தெரியுமா…?!
சீனாவில் தன் கணவர் மீதான ஒரு பெண்ணின் உண்மையான அன்பும் அசாத்திய முயற்சியும், 7 வருடங்களாகக் கோமாவில் இருந்த அவரது கணவரை மீட்டெடுத்துள்ள நெகிழ்ச்சியான சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சீனாவின் ஹெனான் மாகாணத்தைச் சேர்ந்த 45 வயதான சாங் மெய் என்ற பெண்ணின் கணவர் ஜாவ் ஜின்கியான், கடந்த 2019-ஆம் ஆண்டு கூரையின் மேல் சிக்கியிருந்த 3 வயது குழந்தையைக் காப்பாற்ற முயன்றார். குழந்தையைக் காப்பாற்றி கீழே விழும்போது, தன் உடலால் குழந்தையை மூடி பாதுகாத்ததால் குழந்தை உயிர் பிழைத்தது. ஆனால், 6 மீட்டர் உயரத்திலிருந்து விழுந்த ஜாவிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, அவர் கோமா நிலைக்குச் சென்றார். மருத்துவர்கள் அவர் மீண்டும் உணர்வு பெற வாய்ப்பில்லை என்று கைவிட்ட நிலையிலும், அவரது மனைவி சாங் மெய் நம்பிக்கையை இழக்காமல் தொடர்ந்து தன் கணவரை கவனித்து வந்தார்.
தன் கணவரின் மூளை மற்றும் நரம்புகளை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வருவதற்காக, சாங் மெய் ஒரு விசித்திரமான மற்றும் கடினமான முறையைக் கையாண்டார். அவர் தினமும் தன் கணவரின் கை, கால்களை மசாஜ் செய்வதோடு, அவரது கால்களின் நரம்புகளைத் தூண்டுவதற்காகத் தன் பற்களால் அவரது கால் விரல்களைக் கடித்து வந்துள்ளார். பல வருடங்களாக எந்தவொரு சோர்வும் இன்றி, மிகுந்த வலியுடனும் அர்ப்பணிப்புடனும் இந்த முயற்சியை அவர் தொடர்ந்து செய்து வந்தார்.
சாங் மெய்யின் இந்த ஏழு வருட கால இடைவிடாத அன்பும் மருத்துவப் போராட்டமும் வீண் போகவில்லை. சமீபத்தில் ஜாவின் உடலில் அசைவுகள் ஏற்பட்டு, அவர் மெதுவாகத் தன் கண்களைத் திறந்து, தன் மனைவியைப் பார்த்து மிகவும் மெல்லிய குரலில் “ஐ லவ் யூ”என்று கூறினார். இத்தனை ஆண்டுகள் தன் மனைவி பட்ட துயரங்களுக்கும் கண்ணீருக்கும் மருந்தாக அமைந்த இந்த வார்த்தைகளும், அவர்களின் உண்மையான காதல் கதையும் உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களின் இதயங்களைத் தொட்டு நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.
