LATEST NEWS
“எழுந்திருக்கவே முடியாத அளவுக்கு நிரந்தர பதிலடி!” – திமுக-வை ‘கூட்டுக் களவாணிகள்’ என வெளுத்து வாங்கிய விஜய்.. கரூரில் நடந்தது என்ன?
கடந்த ஆண்டு கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த துயரச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஏற்கனவே நிதியுதவி வழங்கப்பட்ட நிலையில், உயர்நீதிமன்ற மதுரை கிளையின் தற்காலிக அனுமதியோடு 32 பேரின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் அரசுப் பணிக்கான நியமன ஆணைகளை முதலமைச்சர் ஜோசப் விஜய் கரூரில் நேரில் வழங்கினார். மேலும், நெரிசலில் உயிரிழந்தவர்களின் நினைவாக கரூரில் நினைவுச் சின்னம் ஒன்று எழுப்பப்படும் என்றும், அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளன்று ‘தாய்மாமன் தங்கமோதிரம்’ என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அவர் அறிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர், கரூர் நெரிசல் விபத்து காவல் துறைக்கு கொடுக்கப்பட்ட தவறான அழுத்தங்களால் நடந்த அரசியல் சூழ்ச்சி எனக் குற்றம் சாட்டினார். எதிர்க்கட்சியினரை ‘கூட்டுக் களவாணிகள்’ என விமர்சித்த அவர், திமுகவை அரசியல் வியாபாரத்திற்கான இயந்திரம் என கடுமையாகச் சாடினார். “குறைவாகப் பேசு, நிறைவாகச் செய்” என்ற கொள்கையுடன் செயல்படும் தமது அரசு, மத்திய அரசின் தொகுதி மறுசீரமைப்பை ஒருபோதும் ஏற்காது என்றும், மேகதாது விவகாரத்தில் உறுதியான நிலைப்பாட்டை எடுக்கும் என்றும் தெரிவித்தார். தற்போதைய த.வெ.க ஆட்சியில் லஞ்சம், ஊழல் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு, அரசு அலுவலகங்களில் மக்களுக்கான மரியாதையும் சேவையும் விரைவாகக் கிடைத்து வருவதாக அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
