LATEST NEWS
“அய்யோ அம்மா நெஞ்சு வலி என கதறியவர்” உத்தமர் வேடம் எடுபடாது ‘மிஸ்டர் மெகா க்ளீன்… ஓடி ஒளிந்தது ஏன்..? செந்தில் பாலாஜியை நோக்கி பாய்ந்த தவெக-வின் அம்பு..!!
தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் திமுகவை விமர்சித்துப் பேசியதற்கு, திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அளித்த பதிலடிக்குத் தமிழக வெற்றிக் கழகத்தின் ஐடி விங் கடுமையான முறையில் எதிர்வினையாற்றியுள்ளது. இதுதொடர்பாக தவெக ஐடி விங் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், செந்தில் பாலாஜியை ‘மிஸ்டர் மெகா க்ளீன்’ என்று கடுமையாக எள்ளி நகையாடியுள்ளனர். மேலும், உண்மையும் நேர்மையும் இருந்தால் விசாரணைக்கு அஞ்சி ஓடி ஒளியாமல் ஆஜராகியிருக்க வேண்டியதுதானே என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அரசியல் வியாபார இயந்திரமான திமுகவால் வாங்கப்பட்டு, பின்னர் அறிவாலய வாஷிங் மெஷினில் போட்டு வெளுத்தெடுக்கப்பட்ட டாஸ்மாக் ஊழல் டான் என்று செந்தில் பாலாஜியை தவெக ஐடி விங் மிகக் காரசாரமாகச் சாடியுள்ளது. முன்பு ஒருமுறை மு.க.ஸ்டாலினே இவரை ஊழல்வாதியாகப் பட்டியலிட்டுப் பேசியதை நினைவு கூர்ந்துள்ள அவர்கள், இன்று இவர் உத்தமர் வேடம் போடுவது நரி நடனமாடுவது போன்ற நகைச்சுவையாக உள்ளது என விமர்சித்துள்ளனர்.
முன்னதாக கரூரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் விஜய் திமுகவை மிகக் காட்டமாக விமர்சித்திருந்தார். அதற்கு செந்தில் பாலாஜி பதில் ட்விட் போட்டிருந்த நிலையில், “இனியும் உங்கள் உத்தமர் வேடம் மக்கள் மத்தியில் எடுபடாது” என்றும், இந்த நரித்தந்திர நாடகத்தைப் பார்த்து நாடே சிரிக்கிறது என்றும் தவெக ஐடி விங் தனது கண்டனப் பதிவை முடித்துள்ளது.
