LATEST NEWS
விஜய்யை வீழ்த்த இணையும் தி.மு.க – அ.தி.மு.க கூட்டணி?.. உண்மையை போட்டு உடைத்த டி.டி.வி. தினகரன்.. தமிழக அரசியலில் அதிரடி ட்விஸ்ட்..!!
மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், கரூர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் விஜய் கூறிய கருத்துகள் குறித்த சி.பி.ஐ. விசாரணையில் அனைத்தும் வெளிப்படும் என்றும், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் கூறினார். மேலும், முதலமைச்சரின் உடல்மொழி மற்றும் பேச்சுக்கள் அனைத்தும் திரைப்பட சூட்டிங் பார்ப்பது போலவும், சினிமாவில் உணர்ச்சிவசப்பட்டு பேசுவது போலவும் இருப்பதாக விமர்சித்தார். த.வெ.க. அரசு அமைத்த விதம் குறித்துப் பேசிய அவர், தி.மு.க. கூட்டணியில் வெற்றி பெற்ற காங்கிரஸ், கம்யூனிஸ்டு, வி.சி.க. உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த 11 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை வைத்தும், 6 எம்.எல்.ஏ.க்களை ராஜினாமா செய்ய வைத்தும் ஆட்சி அமைத்திருப்பது ‘களவாணித்தனம்’ என்றும், ரீல் விடுவதை நிறுத்திவிட்டு அதிகமாக வேலை செய்ய வேண்டும் என்றும் சாடினார்.
திரைத்துறையில் பிரபலமாக இருந்ததால் தான் விஜய் ஆட்சிக்கு வந்துள்ளார் என்பதை மறுக்க முடியாது என்று குறிப்பிட்ட தினகரன், அவரை ஒருபோதும் விஜயகாந்துடன் ஒப்பிட வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார். பா.ஜ.க.வை எதிர்க்க த.வெ.க.-தி.மு.க. ஒரே அணியில் இருக்க வேண்டும் என்ற அரசியல் அறிக்கையைப் போல, த.வெ.க.வை வீழ்த்த தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் இணைவதிலும் தவறில்லை என்றும், கடந்த காலங்களில் அண்ணாவும் ராஜாஜியும் சேர்ந்த வரலாற்று முன் உதாரணங்கள் இருப்பதாகவும் தெரிவித்தார். அரசியல் சூழல் யாரை வேண்டுமானாலும் ஒன்று சேர்க்கும் என்று கூறிய அவர், அமைச்சர் நிர்மல் குமாரின் பேச்சு அகம்பாவத்தைக் காட்டுவதாகவும், தமிழக மக்கள் யாரை வெளியேற்ற வேண்டுமோ அவர்களை உறுதியாக வெளியேற்றுவார்கள் என்றும் தனது பேட்டியில் அழுத்தமாகக் குறிப்பிட்டார்.
