LATEST NEWS
“எங்களை எப்போது காப்பாற்றுவீர்கள்?!”.. உயிரைப் பணயம் வைத்து ஆற்றைக் கடக்கும் பள்ளிக்குழந்தைகள்.. உத்தரகாண்ட் மக்களின் நெஞ்சை பிழியும் அவலம்..!!
உத்தரகாண்டின் நைனிடால் மாவட்டத்தில் உள்ள சுகும் கிராமம், கோசி ஆற்றின் கடுமையான அரிப்பு காரணமாக ஒவ்வொரு பருவமழையின்போதும் அழியும் அபாயத்தை எதிர்கொண்டு வருகிறது. சுமார் 120 குடும்பங்களைக் கொண்ட இந்தக் கிராம மக்கள், கடந்த 1993-ஆம் ஆண்டு முதல் தங்களைப் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றக் கோரி 33 ஆண்டுகளாகப் போராடி வருகின்றனர். மழைக்காலத்தில் கோசி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது, வெளி உலகத்துடனான இவர்களின் இணைப்பு முற்றிலும் துண்டிக்கப்படுகிறது; அத்தியாவசியத் தேவைகளுக்கும், அவசர மருத்துவச் சிகிச்சைகளுக்கும் 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ராம்நகருக்கே செல்ல வேண்டியுள்ளது. குறிப்பாக, பத்தாம் வகுப்பிற்கு மேல் படிக்க வழியில்லாத கிராமத்துச் சிறுவர்கள், தினமும் தங்கள் உயிரைப் பணயம் வைத்து, பெருக்கெடுத்து ஓடும் கோசி ஆற்றைக் கடந்தே மோகனில் உள்ள கல்லூரிக்குச் செல்ல வேண்டிய அவல நிலை நீடிக்கிறது.
கடந்த 2025-ஆம் ஆண்டில் ஹதிதுங்கர் பகுதியில் இடமாற்றத்திற்காக நிலம் காண்பிக்கப்பட்டும், நிர்வாக நடைமுறைகளின் தாமதத்தால் அந்தத் திட்டம் இன்னும் செயல்பாட்டிற்கு வரவில்லை. இதுகுறித்து பேசிய துணை மாவட்ட ஆட்சியர் கோபால் சிங் சௌஹான், கிராமத்தை இடமாற்றம் செய்வதற்கான திட்டம் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், தற்காலிகப் பாதுகாப்பாக மூன்று மாத உணவுப் பொருட்களும், போக்குவரத்திற்கு மிதவைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இருப்பினும், கடந்த 2026 பிப்ரவரிக்குள் இடமாற்றம் செய்வதாகக் கூறி ஏமாற்றிய நிர்வாகத்தின் வெற்று வாக்குறுதிகளை இனி நம்பத் தயாராக இல்லை என்றும், தங்களுக்கு நிரந்தரமான பாதுகாப்பான புகலிடம் மட்டுமே ஒரே தீர்வு என்றும் கிராம மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
