LATEST NEWS
பகீர் வீடியோ..! கண் முன்னே அப்படியே நொறுங்கி விழுந்த மலை… நடுங்க வைக்கும் நிலச்சரிவு.. பயத்தில் அலறியடித்து ஓடிய மக்கள்..!!
உத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாகப் பித்தோராகர் மாவட்டத்தில் உள்ள தார்ச்சுலா – தவாகாட் தேசிய நெடுஞ்சாலையில் திடீரெனப் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. மலையின் ஒரு பெரிய பகுதி அப்படியே சரிந்து நெடுஞ்சாலையில் விழுந்ததில், சாலை முழுவதும் பாறைகளாலும் பாறை இடிபாடுகளாலும் மூடப்பட்டுப் போக்குவரத்து முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டது. இந்தப் பயங்கர நிலச்சரிவு காட்சிகளை அங்கிருந்த மக்கள் தங்கள் கைப்பேசிகளில் வீடியோவாகப் பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலச்சரிவு காரணமாகக் கைலாஷ் மானசரோவர் யாத்திரை, தர்மா பள்ளத்தாக்கு மற்றும் எல்லைப் பகுதிகளுக்குச் செல்லும் பிரதான சாலைகள் துண்டிக்கப்பட்டன. இதன் காரணமாகப் பாதையின் இருபுறமும் ஏராளமான வாகனங்கள் மற்றும் பயணிகள் நீண்ட நேரமாகச் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். நல்லவேளையாகப் பாறைகள் சரிந்து விழுந்த நேரத்தில் வாகனங்கள் எதுவும் அதன் கீழ் சிக்காததால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.
https://www.instagram.com/reel/DbHyKv5OffV/?utm_source=ig_web_button_share_sheet
சம்பவம் குறித்துத் தகவல் அறிந்ததும் உள்ளூர் நிர்வாகமும், மீட்புக் குழுவினரும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். கனரக இயந்திரங்களைப் பயன்படுத்திச் சாலையில் கிடக்கும் பாறைகள் மற்றும் இடிபாடுகளை அகற்றும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. எவ்வாறாயினும், தொடர்ந்து பெய்து வரும் மழை மற்றும் மீண்டும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் காரணமாகப் பாதையைச் சீரமைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
