LATEST NEWS
“டேய் யாரு சாமி நீ..?” மேடையில ட்ரம்ப் பேசிட்டு இருக்க பின்னாடி நின்னு மரண கலாய் கலாய்த்த நபர்.. வைரல் வீடியோ…!!
அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்பிற்குப் பின்னால் அமர்ந்திருந்த நபர் ஒருவர், ட்ரம்பின் தனித்துவமான உடல் அசைவுகளை அப்படியே நகலெடுத்து கிண்டல் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மேரியெட்டாவில் உள்ள வீலர் உயர்நிலைப் பள்ளியில் இந்த பொதுக்கூட்டம் நடைபெற்றது. அங்கு ட்ரம்பிற்குச் சரியாகப் பின்னால் உள்ள இருக்கையில் கோட் சூட் மற்றும் சிவப்பு நிற டை அணிந்து அமர்ந்திருந்த அடையாளம் தெரியாத அந்த நபர், ட்ரம்ப் பேசிக்கொண்டிருந்த போதே அவரது முக பாவனைகள் மற்றும் சைகைகளை அப்படியே செய்து காட்டி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
ட்ரம்ப் தனது உரையில் ஈரான் விவகாரம் மற்றும் தனது அரசியல் எதிரிகளைப் பற்றி ஆவேசமாகப் பேசிக் கொண்டிருந்தார். ஆனால், அவருக்குப் பின்னால் இருந்த நபரோ ட்ரம்பின் கையின் அசைவுகள், தலையைச் சாய்க்கும் விதம் மற்றும் உதடசைவுகளைத் துல்லியமாகப் பிரதிபலித்து ஒட்டுமொத்தப் பொதுக்கூட்டத்தின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பினார். சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோ கிளிப் பரவியதைத் தொடர்ந்து, அந்த நபர் ட்ரம்பை வேண்டுமென்றே கேலி செய்வதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், கூட்டத்தின் ஒரு பகுதிக்குப் பிறகு அவர் அந்த கேமரா கோணத்தில் காணப்படவில்லை என்பதால், அவர் அங்கிருந்து அகற்றப்பட்டாரா அல்லது சீட் மாறினாரா என்ற விவாதமும் எழுந்துள்ளது.
சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த உரையின் போது, ட்ரம்பிற்குப் பின்னால் இருந்த மற்ற பார்வையாளர்கள் சிலர் தங்களுக்குள் அரட்டையடிப்பதும், மொபைல் போன்களைப் பார்ப்பதுமாகப் பேச்சில் ஈடுபாடின்றி காணப்பட்டனர். ஈரான் நாட்டின் பதற்றமான சூழல் காரணமாக உயிரிழந்த 4 அமெரிக்க ராணுவ வீரர்களின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு வந்த சில மணி நேரங்களிலேயே ட்ரம்ப் இந்த கூட்டத்தில் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. ட்ரம்பின் தீவிரமான அரசியல் பேச்சுக்கு நடுவே, அவருக்குப் பின்னால் நடந்த இந்த சுவாரசியமான மற்றும் வேடிக்கையான நிகழ்வு தற்பொழுது உலகளவில் பேசுபொருளாக மாறியுள்ளது.
