CINEMA
யாரை கேட்டு என் பிள்ளைகளை பேசினீங்க..?! அமைதியா இருந்தா பலவீனம்னு நினைப்பா..? குடும்ப புகைப்படத்தை வெளியிட்டு.. ஆவேசமாக கத்திய குஷ்பு..! என்ன நடந்தது..?!
சமூக வலைத்தளங்களில் தங்களது சுயலாபத்திற்காகவும், அதிக வியூஸ்களுக்காகவும் பிரபலங்களின் பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினரைப் பற்றி அவதூறு பரப்புபவர்களுக்கு எதிராக நடிகை குஷ்பு சுந்தர் தனது கடுமையான கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார். தனது குடும்பப் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள அவர், தங்களது இன்றைய நிலைக்குப் பின்னால் பல போராட்டங்கள், கடின உழைப்பு, ரத்தம் மற்றும் வியர்வை சிந்திய கதைகள் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், தங்களது பிள்ளைகளை மிகுந்த அக்கறையுடன் வளர்த்துள்ளதாகவும், அவர்கள் ஒருபோதும் பிரபலங்களின் குழந்தைகள் என்ற அந்தஸ்தைப் பயன்படுத்தி எந்தச் சலுகையும் பெற முயன்றதில்லை என்றும், அவர்களை நினைத்துத் தான் பெருமைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இரண்டு நிமிட மலிவான விளம்பரத்திற்காகத் தன் குழந்தைகளை யாரோ ஒரு அற்ப மனிதர் அவமதிப்பதையோ அல்லது மரியாதையின்றி நடத்துவதையோ ஒரு தாயாகத் தான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என்று குஷ்பு எச்சரித்துள்ளார். தரம் தாழ்ந்து பேசுபவர்களுக்கு அதே பாணியில் பதிலடி கொடுக்கத் தனக்குத் தெரியும் என்றாலும், தனது தாயின் வளர்ப்பிற்கு இழுக்கு ஏற்படுத்தக் கூடாது என்பதற்காகவே அமைதி காப்பதாகக் கூறியுள்ளார். தான் அமைதியாக இருப்பதை பலவீனம் என்று நினைக்க வேண்டாம் எனக் குறிப்பிட்ட அவர், தன் குட்டிகளைக் காக்கப் பாயும் காயமடைந்த புலியைப் போன்றவள் தாய் என்பதால், ஒரு தாயை ஒருபோதும் சீண்ட வேண்டாம் என்று கொந்தளித்துள்ளார்.
இறுதியாக, இந்த எச்சரிக்கை தனது குழந்தைகளை வைத்துக் கேலிச் சித்திரங்கள் மூலம் ஃபாலோயர்களைப் பெற நினைக்கும் நபருக்கு மட்டுமானது அல்ல, தங்களின் குடும்பத்தைக் காப்பாற்றப் பணம் சம்பாதிப்பதற்காகப் பிரபலங்களைப் பற்றி அவதூறாகப் பேசும் ‘யூடியூபர்கள்’ அனைவருக்கும் உரியது என்று குஷ்பு தெளிவுபடுத்தியுள்ளார். இனி இத்தகையச் செயல்களைப் பொறுத்துக்கொள்ள முடியாது என்றும், இன்று நமக்காக நாமே குரல் கொடுக்காவிட்டால் இத்தகைய மட்டமான மனிதர்கள் நம்மை மிதித்துச் சென்றுவிடுவார்கள் என்றும் அவர் தனது பதிவில் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.
