LATEST NEWS
பிரதமர் முதல் அமைச்சர் வரை.. இனி ஒரு மாசம் ஜெயிலுக்குப் போனா பதவி நீக்கமா?.. அரசியல்வாதிகளுக்கு மரண பயம் காட்டும் புதிய சட்டம்..!!
கடுமையான குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்டு, தொடர்ந்து 30 நாட்கள் சிறையில் இருக்கும் பிரதமர், முதலமைச்சர்கள் மற்றும் அமைச்சர்களைப் பதவியிலிருந்து நீக்கக் கோரும் சர்ச்சைக்குரிய 130-வது அரசியலமைப்புத் திருத்த மசோதாவை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தினார். இதனைப் பரிசீலிப்பதற்காக, பாஜக எம்பி அபராஜிதா சாரங்கி தலைமையில் 31 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றக் கூட்டுக் குழு அமைக்கப்பட்டது. இந்த மசோதாவை ஆய்வு செய்த இக்குழு, ஜூலை 17 அன்று தனது அறிக்கையை ஏற்றுக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஜூலை 20-ஆம் தேதி தொடங்க வாய்ப்புள்ள நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் இந்த மசோதா பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்படலாம் என்றும் தெரிகிறது.
இந்த மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதுடன், இது எதிர்க்கட்சி அரசாங்கங்களையும் கூட்டணி ஆட்சிகளையும் சீர்குலைக்கும் கருவியாக மாறும் எனக்கூறி இக்குழுவிலிருந்து விலகியுள்ளனர். இந்தச் சட்டம் அரசியல் பழிவாங்குதலுக்காகத் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கும் எச்சரிக்கைக் குறிப்புகள் அறிக்கையில் இடம் பெறலாம் எனத் தெரிகிறது. குறிப்பாக, குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் தலைவர்களைப் ‘பதவி நீக்கம்’ செய்வதற்குப் பதிலாக, சட்ட நடவடிக்கைகளின் இறுதி முடிவு வரும் வரை அவர்களைத் ‘தற்காலிக இடைநீக்கம்’ செய்ய வேண்டும் என்ற முக்கியப் பரிந்துரையை இக்குழு முன்வைக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
