CRIME
இதுதான் பெண்களுக்கான பாதுகாப்பா..? திருமணமான பெண்ணிடம் அத்துமீறிய ‘தவெக’ பிரமுகர்… தட்டிக்கேட்ட உறவினர்களை மிரட்டிய குளித்தலை போலீஸ்..!!
கரூர் மாவட்டம் குளித்தலையைச் சேர்ந்த 25 வயது திருமணமான பெண் ஒருவர், அங்குள்ள பேருந்து நிலையப் பகுதியில் உள்ள ஒரு மெடிக்கல் கடையில் பணிபுரிந்து வந்துள்ளார். அவருக்கு எதிரே உள்ள கடையில் நின்றுகொண்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளரான ரமேஷ் என்பவர் தொடர்ந்து பாலியல் ரீதியாக ஆபாச சைகைகள் காட்டி தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் கடந்த இரண்டு மாதங்களாக அப்பெண்ணின் கணவரே அவரை வேலைக்கு அழைத்துச் சென்று வந்துள்ளார். இந்நிலையில், நேற்று அவரது தங்கை பாதுகாப்புக்காக அழைத்துச் செல்ல வந்தபோது, ரமேஷ் அவர்கள் இருவரையும் நடுவழியில் வழிமறித்து தவறாக நடக்க முயன்றுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் உடனடியாகத் தனது குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உறவினர்கள் ரமேஷை கைகலப்பில் ஈடுபட்டு தர்மஅடி கொடுத்தனர். பின்னர் அவரை மீட்டு குளித்தலை காவல் நிலையத்தில் ஒப்படைத்து, அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளித்தனர். ஆனால், அங்கு பணியில் இருந்த காவல்துறையினர் புகாரைப் பெறத் தயங்கியதோடு, “அவரைத் தாக்கியதற்காக உங்கள் மீதுதான் முதலில் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்” என்று கூறியதாகத் தெரிகிறது. இதனால் காவல் நிலையத்தில் பெரும் பரபரப்பான சூழல் நிலவியது.
காவல்துறையினர் மறுத்ததைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் வழக்கறிஞர் மூலமாகத் தங்களது புகாரை அளித்தனர். அதன் பின்னரே காவல்துறையினர் புகாரைப் பெற்றுக்கொண்டு, சி.எஸ்.ஆர் மட்டுமே பதிவு செய்துள்ளனர். முழுமையான விசாரணைக்குப் பிறகே குற்ற வழக்காகப் பதிவு செய்ய முடியும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். பெண்களின் பாதுகாப்பைத் தங்களது முக்கியக் கொள்கையாகப் பேசி வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகியே இப்படியொரு செயலில் ஈடுபட்டதும், காவல்துறையினரின் அலட்சியப் போக்கும் அப்பகுதி மக்களிடையேயும், சமூக ஆர்வலர்களிடையேயும் பெரும் அதிருப்தியையும் கண்டனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
