LATEST NEWS
“14 ஆண்டுகள் காத்திருந்து பழிதீர்த்த காலன்” பெற்றோரை கொன்ற அதே காட்டு யானை… 9 கி.மீ தள்ளிச் சென்றும் மருமகள், 4 வயது பேரனை நசுக்கிக் கொன்ற கொடூரம்…!!
நேபாளத்தின் சித்வான் தேசிய பூங்கா அருகே உள்ள மாடி கிராமத்தில், கடந்த 2012ஆம் ஆண்டு தான்சனிச்சரா போட் என்ற கூலித் தொழிலாளியின் தந்தை புதிராம் மற்றும் தாய் ஜராலி ஆகிய இருவரையும் ‘துர்பே’ என்ற காட்டு யானை தாக்கிப் படுகொலை செய்தது. இந்த கோர சம்பவத்தால் நிலைகுலைந்த சனிச்சரா, தனது குடும்பத்தின் பாதுகாப்புக்காக அந்த கிராமத்தை விட்டு சுமார் 9 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜகத்பூர் என்ற கிராமத்திற்கு ஆற்றைக் கடந்து குடிபெயர்ந்தார்.
புதிய இடத்தில் கடந்த 14 ஆண்டுகளாக சனிச்சரா தனது குடும்பத்துடன் பாதுகாப்பாக வாழ்ந்து வந்த நிலையில், கடந்த ஜூலை 12ஆம் தேதி இரவு அவரது வீட்டிற்குள் அதே ‘துர்பே’ காட்டு யானை திடீரென புகுந்தது. அது சனிச்சராவின் 21 வயது மருமகள் ஆஷிகா போட் மற்றும் அவரது 4 வயதுப் பேரன் பரத் போட் ஆகிய இருவரையும் கொடூரமாகத் தாக்கி சம்பவ இடத்திலேயே பலி வாங்கியது. பெற்றோரைப் பறிகொடுத்த அதே யானையிடம், 14 ஆண்டுகள் கழித்துத் தனது மருமகளையும் பேரனையும் சனிச்சரா இழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேபாளத்திலேயே மிகவும் ஆபத்தான விலங்காகக் கருதப்படும் இந்த ‘துர்பே’ காட்டு யானை, கடந்த 2010ஆம் ஆண்டு முதல் இதுவரை சுமார் 25 பேரைத் தாக்கிக் கொன்றுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இதன் கொடூர நடமாட்டத்தைக் கண்காணிக்கப் பலமுறை ரேடியோ காலர் போன்ற கருவிகள் பொருத்தப்பட்டதும், இந்த யானையின் பெயரில் பிரத்யேகமாக ‘விக்கிப்பீடியா’ பக்கம் ஒன்று இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
