LATEST NEWS
“19 இடங்களில் காயம்… கை முறிப்பு” சிறைக்கைதி சபரிவர்மன் உடற்கூராய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்..!!
நாகர்கோவில் மாவட்ட சிறையில் மாற்றுத்திறனாளி விசாரணைக்கைதி சபரிவர்மன் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தில், நீதிபதி முன்னிலையில் நடத்தப்பட்ட உடற்கூராய்வின் முதற்கட்ட அறிக்கை வெளியானது. அதில், அவரது கை, கால்கள், நெஞ்சு மற்றும் தலைப் பகுதிகளில் 19 இடங்களில் காயங்கள் இருப்பதும், வலது கை முறிக்கப்பட்டிருப்பதும் உறுதி செய்யப்பட்டது. இந்த அதிர்ச்சித் தகவல் வெளியானதை அடுத்து, சிறைத்துறையினரே அவரை அடித்துக் கொலை செய்துள்ளதாகக் கூறி, குற்றச்சாட்டிற்குரிய காவலர்களைக் கைது செய்யும் வரை உடலைப் பெறப்போவதில்லை என உறவினர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனை முன்பு தொடர்ந்து தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மற்றும் அதிகாரிகள் போராட்டக் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதன் தொடர்ச்சியாக, இந்த மரணம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த நேசமணிநகர் காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு, சபரிவர்மனைத் தாக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்ட சிறை தலைமை வார்டன் ஜெகன், வார்டன் சிவக்குமார் மற்றும் தலைமை சிறை காவலர் திருவிடைநம்பி ஆகிய 3 பேரையும் அதிரடியாகக் கைது செய்தனர்.
