LATEST NEWS
பரபரப்பு..! “அமைச்சர் பதவி ஆசை காட்டி ராஜினாமா செய்ய மிரட்டினார்” வைகோ மீது பாய்ந்த மதிமுக MLA-க்கள்.. அறிவாலயத்தில் பகிரங்க குற்றச்சாட்டு..!!
எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யும்படி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தங்களை நிர்பந்தித்ததாக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கடையநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ டி.எம்.ராஜேந்திரன் மற்றும் சீர்காழி தொகுதி எம்.எல்.ஏ இ.செந்தில்செல்வன் ஆகியோர் இந்த விபரங்களை கூட்டாகத் தெரிவித்தனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் மதிமுக இணைந்ததை அடுத்து, சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை உடனடியாக ராஜினாமா செய்யுமாறு வைகோ தங்களுக்கு அழுத்தம் கொடுத்ததாக அவர்கள் குறிப்பிட்டனர். அவ்வாறு ராஜினாமா செய்துவிட்டு, தவெக கூட்டணியில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றால், அமையவிருக்கும் புதிய தவெக அரசில் அமைச்சர் பதவிகளைப் பெற்றுத் தருவதாக வைகோ தங்களுக்கு ஆசை வார்த்தை கூறியதாகவும் எம்.எல்.ஏ ராஜேந்திரன் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். மேலும், துரை வைகோ தங்களை ‘விலைபோய்விட்டார்கள்’ என அவதூறு பரப்புவதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்தனர்.
தங்களை நம்பி வாக்களித்த மக்களுக்கு எக்காரணத்தைக் கொண்டும் துரோகம் இழைக்கவோ, தலைகுனிவை ஏற்படுத்தவோ தங்களுக்கு மனமில்லை என்று எம்.எல்.ஏக்கள் திட்டவட்டமாகத் தெளிவுபடுத்தினர். வைகோவின் நிர்பந்தங்களுக்குப் பணியாமல், தாங்கள் தொடர்ந்து திமுக சட்டமன்ற உறுப்பினர்களாகவே நீடித்து மக்கள் பணியாற்றுவோம் என்ற தங்களது அரசியல் நிலைப்பாட்டில் அவர்கள் இருவரும் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்தனர்.
