LATEST NEWS
என்னது..! தீப்பெட்டிக்குள் அடங்கும்.. வெறும் 200 கிராம் எடையுள்ள பட்டுப் புடவையா..! ஸ்ரீசைலம் அம்மனுக்கு நெசவாளர் கொடுத்த அதிசயக் காணிக்கை..!!
தெலுங்கானா மாநிலம் சிர்சில்லாவைச் சேர்ந்த திறமைமிக்க கைத்தறி நெசவாளர் நல்லா விஜய் குமார், ஒரு சிறிய தீப்பெட்டிக்குள் அடங்கக்கூடிய அளவிலான ஒரு அரிய பட்டுப் புடவையை நெய்து சாதனை படைத்துள்ளார். சாதாரண புடவைகளைப் போல 5.5 மீட்டர் நீளமும் 48 இன்ச் அகலமும் கொண்ட இந்த பட்டுப் புடவை, வெறும் 200 கிராம் எடையை மட்டுமே கொண்டது. பாரம்பரிய ‘இக்கத்’ முறையில் மிகவும் நுணுக்கமாக நெய்யப்பட்டுள்ளதால், இதனை மடிக்கும்போது ஒரு சிறிய தீப்பெட்டிக்குள் மிக எளிதாகப் பொருந்திவிடுகிறது.
‘கலாரத்னா’ விருது பெற்ற இந்த நெசவாளர், தனது குடும்பத்தினருடன் இணைந்து சுமார் ஒரு வாரம் கடுமையான உழைப்பைச் செலுத்தி, பாரம்பரிய கைத்தறியில் இந்தப் புடவையை உருவாக்கியுள்ளார். இந்த அரிய கலைப் படைப்பை ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீசைலம் பிரம்மராம்பா மல்லிகார்ஜுன சுவாமி கோயிலில் உள்ள பிரம்மராம்பா தேவிக்கு காணிக்கையாக அவர் வழங்கியுள்ளார். தனது இந்த அதிசயப் படைப்பிற்கு அம்மனின் அனுகிரகமே முழு காரணம் என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீசைலம் கோயில் அறக்கட்டளை வாரியத்தின் தலைவர் போத்துகுண்டா ரமேஷ் நாயுடு மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் முன்னிலையில் இந்த அதிசயப் புடவை கோயிலில் சமர்ப்பிக்கப்பட்டது. புடவையை ஏற்றுக்கொண்ட கோயில் தலைவர் ரமேஷ் நாயுடு, நெசவாளர் விஜய் குமாரின் அசாத்திய திறமையைப் வெகுவாகப் பாராட்டினார். மேலும், கைத்தறி நெசவு என்பது வெறும் தொழில் அல்ல, அது தலைமுறை தலைமுறையாகத் தொடரும் நம் நாட்டின் பெருமைமிக்க கலை வடிவமாகும் எனக் குறிப்பிட்ட அவர், அனைவரும் கைத்தறி தயாரிப்புகளை ஆதரிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். கோயில் நிர்வாகம் சார்பாக இந்த நெசவுக் குழுவினருக்கு சிறப்பான தரிசன ஏற்பாடுகளும் செய்து தரப்பட்டு மரியாதை செய்யப்பட்டது.
