LATEST NEWS
“உனக்கு காதலி ஏதாவது இருக்கா..? உன் பொண்டாட்டி உன் கூட எப்படி வாழுறாளோ… தொண்டரை வெளுத்து வாங்கிய திண்டுக்கல் சீனிவாசன்…!!
திண்டுக்கலில் நடைபெற்ற அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில், கட்சியின் மூத்த நிர்வாகியும் முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் தனது வழக்கமான ‘டங் ஸ்லிப்’ பாணியிலும், அதிரடியான நக்கல்களாலும் தொண்டர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். வரலாற்றுச் சம்பவங்களைக் குறிப்பிடும்போது வழக்கம்போலவே அடுத்தடுத்து உளறிய அவர், “சக்ரவர்த்தி திருமகள் படம் வந்து 60 ஆண்டுகள் ஆகிவிட்டன; அதில் ‘நயவஞ்சகரின் நாக்கு’ என்று கருணாநிதியை நம் தலைவர் விமர்சித்தார்… இல்லை, அன்றைக்கு கருணாநிதி இல்லை, காங்கிரஸை விமர்சித்தார்” என்று மேடையிலேயே தன்னைத் திருத்திக்கொண்டார். மேலும், அதிமுக எம்.எல்.ஏ மரகதம் குமரவேல் என்பதற்குப் பதிலாக, ‘மரகதம் சந்திரசேகர்’ என்று மாற்றிப் பேசி சிரிப்பலையை ஏற்படுத்தினார்.
கட்சியை விட்டு விலகி தவெக உள்ளிட்ட பிற கட்சிகளுக்குச் சென்றவர்களைக் கடுமையாகச் சாடிய சீனிவாசன், “தோழர்களே! உங்களுக்கு எது கிடைக்கிறதோ அதை வைத்து அடியுங்கள், அவர்கள் நன்றி கெட்டவர்கள்” என்று ஆவேசமாகப் பேசினார். அப்போது கூட்டத்தில் தொடர்ந்து செல்போனில் பேசிக்கொண்டிருந்த ஒரு தொண்டரைக் கவனித்த அவர், கடுமையான கோபத்துடன், “உனக்கு காதலி ஏதாவது இருக்கா? செல்லை பிடிச்சு உடைச்சுருவேன்! நீ கொத்தனாரா, சித்தாள்களை எல்லாம் கூப்பிட்டு வந்திருக்கியா?” என்று ஒருமையில் விளாசி, அவரை உடனடியாக வெளியேற்ற உத்தரவிட்டார்.
அத்தோடு நிறுத்தாமல், மேடையில் தனக்கு அறிவுரை கூற முயன்ற மற்றொரு தொண்டரையும் நக்கலாக வாரிப் போட்டார். “புத்திமதி எல்லாம் சொல்லாதீங்க, உட்காருப்பா! உன் கூட உன் மனைவி எப்படி வாழ்கிறாளோ தெரியவில்லை” என்று அவர் கிண்டலடித்தபோது கூட்டத்தில் சிரிப்பு சத்தம் அடங்க நீண்ட நேரமானது. அவரது இந்த எதார்த்தமான, அதே சமயம் அதிரடியான பேச்சும், தொண்டர்களை மேடையிலேயே வறுத்தெடுத்த பாணியும் அங்கிருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியது.
தன் குடும்ப அரசியல் குறித்தும் வெளிப்படையாகப் பேசிய அவர், “என் மகன் மாற்றுக்கட்சிக்கு போவதை என்னால் தடுக்க முடியவில்லை என்றால் நான் எதற்கு வேட்டி, சட்டை கட்ட வேண்டும்?” என்று ஆவேசமாகக் கேள்வி எழுப்பினார். இறுதியாக, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% நீட் உள்ஒதுக்கீட்டை எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த வரலாற்றுச் சாதனையைத் தொண்டர்களுக்கு நினைவுகூர்ந்து தனது உரையை முடித்தார். இக்கூட்டத்தில் அவர் பேசிய வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
