LATEST NEWS
“இதுதான் நீங்க சொன்ன ‘ஒரு பைசா’ ஊழலற்ற ஆட்சியா?” – பில் பாஸ் செய்ய ரூ.1.30 லட்சம் லஞ்சம் வாங்கிய தவெக ஊராட்சி மன்ற தலைவர்..? G-Pay ஆதாரத்துடன் வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!
தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சியைத் தருவேன் என்று முதலமைச்சர் ஜே. ஜோசப் விஜய் தொடர்ந்து முழங்கி வரும் வேளையில், அவரது கட்சியைச் சேர்ந்த பிரமுகரே கையும் களவுமாக லஞ்சம் வாங்கி சிக்கிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மாம்பாக்கம் தவெக ஊராட்சி மன்ற தலைவரும், தவெக செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட இணை செயலாளருமான வீரா (எ) வீராசாமி, ஒப்பந்ததாரர் ஒருவரிடம் ரூ.1.30 லட்சம் லஞ்சம் வாங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
திருப்போரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாம்பாக்கம் ஊராட்சியில் நவீன் (24) என்ற ஒப்பந்ததாரர் ரூ.9.80 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை முடித்துள்ளார். பணிகள் முடிந்தும் அவரது பில் தொகையை பாஸ் செய்யாமல் நிலுவையில் வைத்திருந்த தவெக தலைவர் வீரா, அதைச் செய்து தருவதற்காக முதலில் ரூ.1 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார். பின்னர் பேரம் பேசப்பட்டு, இறுதியில் ரூ.1.30 லட்சம் தருமாறு ஒப்பந்ததாரரை மிரட்டியுள்ளார். அதன்படி ஜி-பே மூலமாகவும், மீதித் தொகையை நேரடியாகவும் தவெக பிரமுகர் அலுவலகத்தில் வைத்து வாங்கும் காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளன. இவ்வளவு பணம் கொடுத்தும் இன்னும் பில் தொகை பாஸ் செய்யப்படவில்லை என ஒப்பந்ததாரர் வேதனை தெரிவித்துள்ளார்.
https://twitter.com/sunnewstamil/status/2077251367362507237/video/1
அதிர்ச்சியூட்டும் பின்னணியாக, இந்தத் தவெக தலைவர் வீரா கடந்த 2023ஆம் ஆண்டு நிதி முறைகேடு புகாரில் சிக்கி மாவட்ட ஆட்சியரால் அவரது செக் பவர் பறிக்கப்பட்டவர் ஆவார். தொடர்ந்து 2025ஆம் ஆண்டு வார்டு உறுப்பினர்களால் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு இவரது பதவியும் பறிக்கப்பட்டது. பின்னர் நீதிமன்றம் சென்று கடந்த 20 நாட்களுக்கு முன்புதான் மீண்டும் தலைவர் பொறுப்பை ஏற்றார். பொறுப்பேற்ற சில நாட்களிலேயே தவெக நிர்வாகி லஞ்சம் வாங்கி மாட்டிக்கொண்ட சம்பவம், “இதுதான் நீங்க சொன்ன மாற்றமா?” என நெட்டிசன்கள் மற்றும் எதிர்க்கட்சிகளிடையே தவெக அரசுக்கு எதிரான கடுமையான விமர்சனங்களை எழுப்பியுள்ளது.
