LATEST NEWS
மக்களே.! “படிச்சும் நாம முட்டாளா இருக்கோம்!” பிளாஸ்டிக் கப் டீ முதல் ஸ்வீட்ஸ் வரை.. அமைச்சர் அருண்ராஜ் ஓப்பன் டாக்..!
இந்தியர்களின் ஆயுட்காலம் நீட்டிப்பு குறித்து டாக்டர் நவீன் ஞானசேகரன் எழுதிய ‘தி 100 இயர் ப்ளூ பிரின்ட்’ என்ற புத்தகத்தை அமைச்சர் அருண்ராஜ் வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், நமது முன்னோர்கள் உடலை எவ்வளவோ பாதுகாத்தார்கள் என்றும், ஆனால் நாம் இப்போது அதில் பின்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம் என்றும் கவலை தெரிவித்தார். ‘உணவே மருந்து’ என்ற வாழ்க்கை முறையே சிறந்தது என்பதால், அனைவரும் சத்தான மற்றும் புரதச்சத்து மிக்க உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
மேலும், மேலை நாட்டினர் எந்த நேரத்தில் வேலையை முடித்து வந்தாலும் உடற்பயிற்சியில் கவனம் செலுத்துவதை சுட்டிக்காட்டிய அமைச்சர், நம் நாட்டில் அந்தப் பழக்கம் இல்லை என்றும், உடற்பயிற்சி மட்டுமே நோயற்ற வாழ்வைத் தரும் என்பதை நாம் உணர வேண்டும் என்றும் கூறினார். தற்போதைய வாழ்வியல் மாற்றத்தால் பிளாஸ்டிக் கவரில் சூடாக டீ வாங்கி குடிப்பது போன்ற ஆபத்தான பழக்கங்கள் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இதனால் உடலில் கலக்கும் ரசாயனங்கள் புற்றுநோயைக்கூட ஏற்படுத்தும் என்பதால், இது போன்ற விஷயங்கள் குறித்து அரசு விரைவில் விழிப்புணர்வு நடவடிக்கை எடுக்கும் என்றார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அருண்ராஜ், இந்த மாத இறுதியில் தமிழக பட்ஜெட் சட்டசபையில் தாக்கல் செய்யப்படவுள்ளது என்ற முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். இந்த பட்ஜெட்டில் மக்களின் ஆரோக்கியத்தை வளர்க்கக்கூடிய பல புதிய திட்டங்களும், மருத்துவத்துறைக்கான முக்கிய அறிவிப்புகளும் காத்திருக்கின்றன என்றும், சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் முழு உடல் பரிசோதனை திட்டத்தை மற்ற மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
