LATEST NEWS
“50 வருஷ லாபியை தவிடுபொடியாக்கிய முதல்வர் விஜய்”.. நாதக-வில் இருந்து விலகி தவெகவில் இணைந்த பின்னணி என்ன?.. சீமானை அதிரவைத்த சங்கரின் அதிர்ச்சிப் பேட்டி..!!
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் 35 சதவீத வாக்குகளைப் பெற்று, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள நிலையில், மாநில அரசியல் ஒரு புதிய பரிமாணத்தை எட்டியுள்ளது. நேர்மையான, வெளிப்படையான ஆட்சியை வழங்குவதாகக் கூறி தவெக களமிறங்கியுள்ள சூழலில், பெரிய இளைஞர் பட்டாளம் புதிய அமைச்சரவையை அலங்கரித்துள்ளது. தேர்தல் முடிவுகளுக்குப் பின் தவெக 108 இடங்களுடன் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்ததைத் தொடர்ந்து, மாற்றுத் திறனாளிகள் மற்றும் பிற திராவிடக் கட்சிகளின் தலைவர்களும் தொண்டர்களும் தங்களது அரசியல் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு சாரை சாரையாக தவெகவில் இணைந்து வருகின்றனர். அதன்படி இன்று காலை நாம் தமிழர் கட்சியின் முக்கிய முகமும், வழக்கறிஞர் பாசறை மாநில செயலாளருமான வழக்கறிஞர் சங்கர், தவெக அமைச்சர் சி. டி. ஆர். நிர்மல் குமார் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக அக்கட்சியில் இணைந்துள்ளார்.
கடந்த 9 ஆண்டுகளாக நாம் தமிழர் கட்சியில் பயணித்து, 2021 மற்றும் 2026 ஆகிய இரண்டு சட்டமன்றத் தேர்தல்களிலும் அண்ணா நகர் தொகுதியில் வேட்பாளராகக் களம் கண்டவர் சங்கர் என்பது குறிப்பிடத்தக்கது. கட்சியின் தலைமை உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகவே அக்கட்சியில் இருந்து விலகி, தவெகவில் இணையும் இந்த முக்கிய முடிவை எடுத்திருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து அவர் பேசுகையில், கடந்த 50 ஆண்டுகால திராவிடக் கட்சிகளின் பண பலம், சாதி பலம் மற்றும் ஊழல் முறைகளை உடைத்து விஜய் தன்னுடைய ஆட்சியை அமைத்திருப்பதாகப் பாராட்டியுள்ளார். நாம் தமிழர் கட்சி மாற்று அரசியலுக்காகக் கடுமையாகப் போராடினாலும், தவெகவே பெண்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடைந்து வெற்றியைப் பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், தாம் எடுத்தது அரசியல் ரீதியான முடிவு மட்டுமே என்றும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தனிப்பட்ட முறையில் என்றும் அன்பும், மரியாதையும், நட்புறவும் தொடரும் என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
