LATEST NEWS
மனு கொடுத்த 5 நாட்களில் அசுர வேகம்.. ஏழை நோயாளியின் உயிர்காக்க 20 விலையுயர்ந்த ஊசிகளை இலவசமாக அனுப்பி அசத்திய CM செல்..!!
பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் தீர்த்து வைக்கும் முதலமைச்சரின் முகவரித் துறை, விலையுயர்ந்த ஊசிகள் வாங்கப் பணமில்லாமல் தவித்த நோயாளி ஒருவரின் கோரிக்கையை, மனுப் பெற்ற 5 நாட்களில் தீர்த்து வைத்துள்ளது. கடுமையான உடல்நலக் குறைபாடு காரணமாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிக்குத் தேவையான 20 அத்தியாவசிய ஊசிகளை, அவரது குடும்பத்தினரால் தனியார் கடைகளில் வாங்க முடியாத சூழல் நிலவியது.
இதனையடுத்து, குடும்பத்தினர் முதலமைச்சரின் முகவரி இணையதளம் வாயிலாகப் புகார் மனு அளித்தனர். மனுவின் அவசரத் தன்மையை உணர்ந்த முதலமைச்சரின் தனிப்பிரிவு அதிகாரிகள், உடனடியாக அதனை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத் துறைக்கு அனுப்பி, தாமதமின்றி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர்.
மனு அளிக்கப்பட்ட 5 நாட்களுக்குள், பாதிக்கப்பட்ட நோயாளிக்குத் தேவையான அனைத்து 20 ஊசிகளும் முழு அரசு செலவில் தயார் செய்யப்பட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுச் சிகிச்சை தொடர வழிவகை செய்யப்பட்டது. அரசு நிர்வாக நடைமுறைகளை விரைவுபடுத்தி, மனித உயிரைக் காக்க எடுக்கப்பட்ட இந்த மின்னல் வேக நடவடிக்கை பொதுமக்கள் மத்தியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
