CRIME
மதுபோதையில் நடுரோட்டில் ஆபாச சைகை.. “நான் யாருக்கும் பயப்பட மாட்டேன்” என மிரட்டிய அரசு அதிகாரி – பகீர் வீடியோ வைரல்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் சஹாஸ்வான் நகராட்சியில் வரி வசூலிப்பவராக பணிபுரிந்து வரும் விபின் குமார் என்பவர், குடித்தே வெறியில் நாற்காலியில் அமர்ந்திருந்த பொதுமக்களிடம் ஆபாசமான சைகைகளைக் காட்டி அநாகரீகமாக நடந்துகொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சனிக்கிழமை நடைபெற்ற இந்த சம்பவத்தின்போது, அங்கிருந்தவர்கள் அவரது செயலைக் கண்டித்தபோது, “நான் யாருக்கும் பயப்பட மாட்டேன்” என்று அவர் போதையில் திமிராகப் பேசியுள்ளார்.
அரசு ஊழியரின் இந்த அநாகரீகமான நடத்தை, நகராட்சி நிர்வாகத்தின் நற்பெயரைக் கெடுக்கும் வகையில் உள்ளதாகக் கூறி நகராட்சித் தலைவர் அவரை உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்து அதிரடி உத்தரவிட்டுள்ளார். இந்த வீடியோவை எடுத்த வார்டு கவுன்சிலர் முகமது உமர், சம்பந்தப்பட்ட ஊழியர் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் எழுத்துப்பூர்வமாகப் புகார் அளித்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து சஹாஸ்வான் காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், காவல்துறையினர் சட்டப்பூர்வமான விசாரணையைத் தொடங்கியுள்ளனர். மேலும், துறை ரீதியான விரிவான விசாரணைக்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதோடு, அதன் முடிவுகளின் அடிப்படையில் அடுத்தகட்ட கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
