LATEST NEWS
என்னடா சொல்றீங்க… AI வச்சு கோர்ட் கேஸ் ஜெயிக்கலாமா..? வக்கீலே இல்லாம… ChatGPT-ஐ நம்பி களமிறங்கி 52 லட்சத்தை மீட்ட நபர்..!!
பிரிட்டனில் ஹெத்ரோ விமான நிலையத்தில் தீயணைப்பு வீரராகப் பணிபுரியும் 40 வயதான கிரேக் டிட்செனர், லாட்டரியில் வென்ற தொகையிலிருந்து சுமார் ரூ.52 லட்சத்தை பிரீமியம் பாண்டுகளில் முதலீடு செய்வதற்காகத் தனது அப்போதைய காதலி ஹீதர் டக்ளஸிடம் வழங்கினார். இருப்பினும், இருவருக்கும் இடையே பிரிவு ஏற்பட்ட பிறகு, ஹீதர் அந்தப் பணத்தைத் திரும்பத் தர மறுத்து, அது தனக்குக் கொடுக்கப்பட்ட ‘பரிசு’ என்று வாதிட்டார். வழக்கறிஞர்களின் அதிகப்படியான கட்டணம் காரணமாக மனமுடைந்த கிரேக், நீதிமன்றத்தை அணுகுவதற்காக ChatGPT AI தொழில்நுட்பத்தின் உதவிய நாடினார்.
ChatGPT கிரேக்கிற்கு நேரடியாகச் சட்டப் பிரதிநிதியாகச் செயல்படாமல், நீதிமன்ற நடைமுறைகள், தேவையான ஆவணங்கள் மற்றும் படிவங்கள் குறித்து எளிய முறையில் வழிகாட்டியது. AI அளித்த தெளிவான தகவல்களின் அடிப்படையில், வழக்கறிஞர்கள் எவருமின்றி கிரேக் தாமே நேரடியாக நீதிமன்றத்தில் இறங்கித் தனது தரப்பு வாதங்களை முன்வைக்கத் துணிச்சலாக முடிவெடுத்தார்.
மத்திய லண்டன் கவுண்டி நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கில், ஹீதர் வைத்த குற்றச்சாட்டுகளுக்கு உரிய ஆதாரங்களையோ அல்லது வங்கிச் சான்றுகளையோ சமர்ப்பிக்கத் தவறிவிட்டார். அனைத்து ஆதாரங்களையும் பரிசீலித்த நீதிபதி சார்லோட் ஹார்ட், கிரேக்கிற்குச் சாதகமாகத் தீர்ப்பளித்து, ரூ.52 லட்சத்தையும் உடனடியாகத் திரும்ப ஒப்படைக்க உத்தரவிட்டார். ChatGPT-ன் உதவியும் தளர்வில்லாத முயற்சியுமே இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிக்குக் காரணம் என கிரேக் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
