LATEST NEWS
“நான் எந்தத் தவறும் செய்யல…” தவெக அமைச்சரின் மிரட்டல் ஆடியோ லீக்.. சாத்தூர் ராஜகுருவின் பரபரப்பு வாக்குமூலம்.. தமிழக அரசியலில் பரபரப்பு..!!
தமிழக வெற்றிக் கழகத்தில் அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கும், ஒன்றிய செயலாளர் லெட்சுமணனுக்கும் இடையே நடைபெற்றதாகக் கூறப்படும் போன் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆடியோவில் ஒன்றிய செயலாளரைத் தகாத வார்த்தைகளால் திட்ட அறிவுறுத்தியதன் பேரில், 25 ஆண்டுகளாக அரசு ஒப்பந்தக்காரராக உள்ள சாத்தூர் ராஜகுரு என்பவர் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். உட்கட்சியில் உள்ள சிலர் அளித்த தவறான தகவல்களை நம்பி அமைச்சர் தன் மீது நடவடிக்கை எடுத்துள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ள ராஜகுரு, நியாயத்தை வெளிக்கொணரவே இந்த ஆடியோவை வெளியிட்டதாகத் தெரிவித்துள்ளார்.
தான் எந்தத் தவறும் செய்யாமல் நேர்மையாகக் கட்சியை வளர்க்க உழைத்ததாகவும், சாத்தூர் தொகுதி வேட்பாளர் சீட் மற்றும் யூனியன் சேர்மன் பதவிக்கு முயற்சி செய்த தன் மீது வீண் பழ சுமத்தப்பட்டுள்ளதாகவும் ராஜகுரு வேதனை தெரிவித்துள்ளார். மனதளவில் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கும் அவர், தன் மீதான நீக்க உத்தரவைத் திரும்பப் பெற்று மீண்டும் கட்சியில் பழைய பதவியை வழங்கிட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார். உட்கட்சிப் பூசல்களால் எழுந்த இந்த விவகாரம் தவெக தொண்டர்களிடையே பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
ஏற்கனவே பல மாவட்டங்களில் உட்கட்சிப் பூசல்களும் நிர்வாகிகள் நீக்கமும் தொடர்ந்து வரும் சூழலில், அமைச்சரின் பெயர் விவகாரத்தில் அடிபடுவது தவெக தலைவரும் முதல்வருமான விஜய்யின் கவனத்திற்குச் சென்றுள்ளது. லீக்கான ஆடியோ பதிவு தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தி, இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன
