LATEST NEWS
இப்படி ஒரு அலட்சியமா..?! மாற்றி அறுவை சிகிச்சை செய்துவிட்டு… மீண்டும் ஆபரேஷன் தியேட்டருக்கு தூக்கிச் சென்ற மருத்துவர்கள்…! கதறும் பெற்றோர்..!!
ஹரியானா மாநிலம் நூ மாவட்டத்தில் உள்ள ‘ஷஹீத் ராஜா ஹசன் கான் மேவாதி அரசு மருத்துவக் கல்லூரியில்’ மருத்துவர்களின் கடும் அலட்சியத்தால் அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மாவலி கிராமத்தைச் சேர்ந்த ஆரிஃப் என்பவரது 4 வயதான மகன் சாத் என்பவனுக்கு இடது காலில் தொற்று, வீக்கம் மற்றும் சீழ் பிடித்த பிரச்சனை இருந்தது. கடந்த ஜூலை 20 அன்று சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்ட சிறுவனுக்கு, ஜூலை 23 அன்று பரிசோதனைகளின் அடிப்படையில் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு முன்பாக இடது காலில் தான் தொற்று உள்ளது என்பதை பெற்றோர் மருத்துவக் குழுவிடம் தெளிவாகக் கூறியிருந்தும், மருத்துவர்கள் ஆரோக்கியமாக இருந்த சிறுவனின் வலது காலில் அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.
அறுவை சிகிச்சைக்குப் பிறகு சிறுவனை வார்டுக்குக் கொண்டு வந்தபோது, தொற்று இல்லாத ஆரோக்கியமான காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருப்பதைக் கண்டு பெற்றோர் அதிர்ச்சியடைந்து மருத்துவமனை நிர்வாகத்திடம் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, மருத்துவர்கள் தங்களின் தவறைக் ஒப்புக்கொண்டு, சிறுவனை மீண்டும் அறுவை சிகிச்சை அரங்கிற்கு அழைத்துச் சென்று தொற்றால் பாதிக்கப்பட்ட இடது காலில் இரண்டாவது முறையாக அறுவை சிகிச்சை செய்தனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, அலட்சியமாகச் செயல்பட்ட மருத்துவர் பவன் மற்றும் அவரது குழுவினர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவும், துறைரீதியான விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்கவும் சிறுவனின் தந்தை மருத்துவக் கல்லூரி இயக்குநரிடம் எழுத்துப்பூர்வமாகப் புகார் அளித்துள்ளார்.
இச்சம்பவத்திற்கு நூ தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் சௌத்ரி ஆஃப்தாப் அகமது கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஒரு சிறிய சிறுவனின் அறுவை சிகிச்சையில் நடந்துள்ள இந்த அலட்சியம் மருத்துவக் கல்லூரியின் செயல்பாட்டையே கேள்விக்குறியாக்கியுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். அதேவேளையில், ஹரியானா மாநில அமைச்சர் விபுல் கோயல் இச்சம்பவம் குறித்து எழுத்துப்பூர்வமாகப் புகார் அளிக்கப்படும் பட்சத்தில், முழுமையான விசாரணை நடத்தப்பட்டு தவறிழைத்தவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.
