LATEST NEWS
“வேலை தெரியலன்னா போயா” த.வெ.க. எம்.எல்.ஏ. முன்னிலையிலேயே அரசு அதிகாரியை ஒருமையில் மிரட்டிய நிர்வாகிகள்.. பெரும் பரபரப்பு..!
சென்னை நீலாங்கரை பகுதியில் நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாடு குறித்து விளக்கம் கேட்கச் சென்ற சோழிங்கநல்லூர் தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ. ECR சரவணன் முன்னிலையில், மண்டல உதவிப் பொறியாளரிடம் த.வெ.க. நிர்வாகிகள் ஒருமையில் பேசி மிரட்டல் விடுத்ததாக எழுந்த புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சந்திப்பின் போது, த.வெ.க. பகுதிச் செயலாளர் தனசேகர் என்பவர் அரசு அதிகாரியை நோக்கி, “வேலை தெரியாவிட்டால் போயா” என மிகக் கடுமையாகப் பேசியதாகக் கூறப்படுகிறது.
பொதுமக்களின் குடிநீர் பிரச்சினையைத் தீர்க்கச் சென்ற இடத்தில், அரசு ஊழியரை மக்கள் பிரதிநிதியின் முன்னிலையிலேயே ஒருமையில் பேசி மிரட்டிய சம்பவம் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. அரசு அதிகாரிகளின் கண்ணியத்தைக் குறைக்கும் வகையில் நடந்துகொண்ட த.வெ.க. நிர்வாகிகளின் இந்தச் செயலுக்குப் பல்வேறு தரப்பினரும், சமூக ஆர்வலர்களும் தங்களின் கடும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
