LATEST NEWS
“அங்க 10 கி.மீ ரோடே இல்லை”.. உங்க லட்சணத்தை நான் காட்டவா..? முடிஞ்சா நேர்ல வாங்க, சவால் விடுறேன்… திமுக, அதிமுகவின் பொய் முகத்தை கிழித்தெறிந்த அமைச்சர் வன்னி அரசு..!!
தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் இன்று நடைபெற்ற மானியக் கோரிக்கையின் போது, மலைவாழ் மக்கள் நலன் குறித்த விவாதத்தில் திமுக மற்றும் அதிமுகவினரைத் தவெக அரசின் அமைச்சர் வன்னி அரசு கடுமையாக வெளுத்து வாங்கியுள்ளார். முன்னாள் அமைச்சரும் திமுக கொறடாவுமான எ.வ. வேலு பேசும்போது, திருவண்ணாமலை மற்றும் கள்ளக்குறிச்சி மலைக் கிராமங்களில் திமுக ஆட்சிக்காலத்தில்தான் அதிகளவில் நில உரிமைப் பட்டாக்களும், சாலை வசதிகளும் செய்து தரப்பட்டன என்று வாதிட்டார். அதேபோல் அதிமுக உறுப்பினரும் தங்களது ஆட்சியில் அமைச்சர்கள் கால் படாத இடமே மலையில் இல்லை என்றும், தேவையான அனைத்தும் அதிமுகவால் தான் செய்யப்பட்டன என்றும் குறிப்பிட்டனர்.
இதற்குப் பதிலடி கொடுத்துப் பேசிய அமைச்சர் வன்னி அரசு, தமிழகத்தில் வெறும் 8 லட்சம் மலைவாழ் மக்கள் மட்டுமே இருக்கும் நிலையில், கடந்த கால ஆட்சிகளில் அவர்களுக்கான அடிப்படைத் தேவைகள் கூட முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என்று சாடினார். குறிப்பாகக் கீழ் தீவனூர், மேல் தீவனூர் போன்ற கிராமங்களுக்குத் தற்போதும் 10 கி.மீ அளவிற்குச் சாலைகளே இல்லை என்றும், தாங்கள் நேரடியாக அங்கு நடந்து சென்று ஆய்வு செய்ததாகவும் வெளிப்படையாகக் குற்றம் சாட்டினார். கடந்த காலங்களில் நீங்கள் தத்தெடுத்து வேலை செய்த லட்சணம் எந்த நிலையில் இருக்கிறது என்பதை இந்தச் சபை அறியும் என்றும் அவர் விமர்சித்தார்.
மேலும், இந்த விவாதம் வெற்று வாதங்களுக்கானது அல்ல, மக்களின் வலியைப் பற்றிப் பேசுவதற்கானது என்று குறிப்பிட்ட அமைச்சர், செய்தோம் செய்தோம் என்று பெருமை பேசாமல் நேரில் வந்து பார்க்குமாறு எதிர்க்கட்சிகளுக்குச் சவால் விடுத்தார். தற்போது சாலை இல்லாத அந்த மலைக் கிராமங்களுக்குத் தவெக அரசு புதிய சாலைகளை அமைக்கத் தொடங்கியுள்ளதாகவும் அமைச்சர் வன்னி அரசு தனது உரையில் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
