LATEST NEWS
“அய்யோ பாவம்..! பெற்ற தாயை இழந்த 3 சிறுமிகள்..” தேவதையாக வந்து பெண் போலீஸ் செய்த நெகிழ்ச்சி காரியம்.. இணையத்தை உருகவைக்கும் சம்பவம்..!!
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் தங்களது தாய் திடீரென உயிரிழந்ததால் தவித்த மூன்று சிறுமிகளுக்கு, காவல்துறை உதவி ஆய்வாளர் சோனியா படேல் என்பவர் மனிதநேயத்துடன் உதவிக் கரம் நீட்டி மறுவாழ்வு அளித்துள்ள நெஞ்சை நெகிழவைக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது. கடந்த செப்டம்பர் 22 அன்று அந்தச் சிறுமிகளின் தாய் திடீரென மரணமடைந்ததைத் தொடர்ந்து, செய்வதறியாது தவித்த அந்த ஏழைக் குடும்பத்திற்குச் சோனியா படேல் உடனடியாக உதவினார். தாயின் இறுதிச் சடங்குகளைச் செய்வதற்கு முன்னின்று உதவியதுடன் அவர் நின்றுவிடாமல், ஆதரவின்றி தவித்த அந்த மூன்று பெண் குழந்தைகளுக்கும் தேவையான மருத்துவப் பரிசோதனைகள், உணவு மற்றும் அடிப்படைத் தேவைகள் அனைத்தும் தங்கு தடையின்றி கிடைப்பதை உறுதி செய்தார்.
அதனைத் தொடர்ந்து, அந்தச் சிறுமிகளின் தந்தையுடன் இணைந்து பணியாற்றிய சோனியா படேல், குழந்தைகளின் எதிர்காலப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு குழந்தை நலக் குழுவின் அதிகாரப்பூர்வ உத்தரவை விரைந்து பெற்றார். பின்னர், அந்த மூன்று சகோதரிகளையும் போபாலில் உள்ள ‘மாத்ரு சாயா’ காப்பகத்தில் மறுவாழ்விற்காகப் பத்திரமாக ஒப்படைத்தார். ஒருவருக்கு உதவுவது என்பது ஏதோ ஒரு பெரிய காரியத்தைச் செய்துவிட்டு விலகுவது அல்ல, மாறாக அவர்கள் முழுமையாகப் பாதுகாப்பாக இருக்கும் வரை அவர்களுடனே கூடவே இருப்பதுதான் என்பதைச் சப்-இன்ஸ்பெக்டர் சோனியா படேலின் இந்த உன்னதச் செயல் ஒட்டுமொத்த சமூகத்திற்கும் நிரூபித்துள்ளது.
