LATEST NEWS
“TN 07 CM 2031” அன்று விஜய் இன்று திருமா… கோட் சூட் அணிந்து மாஸ் என்ட்ரி கொடுத்த திருமாவளவன்… கார் நம்பர் பிளேட்டால் இணையத்தில் அனல் பறக்கும் அரசியல் விவாதம்..
செம்பரம்பாக்கத்தில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக வந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், ‘TN 07 CM 2031’ என்ற பதிவெண் கொண்ட சொகுசு காரைப் பயன்படுத்தியது தற்போது சமூக வலைதளங்களில் மிகத் தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. சென்னை பூந்தமல்லி அருகே நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு அவர் கோட் சூட் அணிந்து வந்து இறங்கிய விடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இந்தக் காரின் எண் பலகையில் இடம்பெற்றுள்ள ‘CM 2031’ என்ற எழுத்துக்கள், வரும் 2031-ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு விசிக தொண்டர்களால் முன்னிறுத்தப்படுவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். 2031-இல் தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சராகத் திருமாவளவன் பொறுப்பேற்க வேண்டும் என்ற தொண்டர்களின் அரசியல் ஆசையையும், இலக்கையும் வெளிப்படுத்தும் விதமாகவே இந்த வாகன எண் திட்டமிட்டுப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக எக்ஸ் (X) மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் விவாதங்கள் அனல் பறக்கின்றன.
இதற்கு முன்னதாக, தற்போதைய முதலமைச்சர் விஜய் நடித்த ‘GOAT’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘CM 2026’ என்ற கார் பதிவெண், 2026 சட்டமன்றத் தேர்தலில் அவரது அரசியல் வருகையைக் குறிக்கும் வகையில் பெரும் பேசுபொருளானது குறிப்பிடத்தக்கது. அதே பாணியில் தற்போது திருமாவளவனின் காரும் ‘CM 2031’ என்ற குறியீட்டுடன் வலம் வருவது, தவெக – விசிக கூட்டணி மற்றும் தமிழகத்தின் எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்த புதிய விவாதங்களை அரசியல் வட்டாரத்தில் கிளப்பியுள்ளது.
