LATEST NEWS
அரை கப் டீ 450 ரூபாயா..?! அரசு பல்கலைக்கழகமா… இல்ல 5 ஸ்டார் ஹோட்டலா..? பட்டமளிப்பு விழா என்ற பெயரில் நடந்த பிரம்மாண்ட கொள்ளை.. RTI-ல் அம்பலமான பகீர் உண்மை..!!
மத்தியப் பிரதேச மாநிலத் தலைநகர் போபாலில் உள்ள பர்கதுல்லா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாச் செலவுகள் தொடர்பாகத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வெளியான தகவல்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. பல்கலைக்கழக விழா நிகழ்வின் போது அரை கப் பிளாக் டீக்கு ரூ.450-ம், வெறும் 1 கிலோமீட்டர் தூரம் பயணிப்பதற்காகக் கார் வாடகையாக ரூ.3000-ம் செலுத்தப்பட்டுள்ள அதிர்ச்சித் தகவல்கள் வெளிவந்துள்ளன. இத்தகைய ஆடம்பர மற்றும் விஐபி செலவினங்கள் பல்கலைக்கழக நிர்வாகத்தின் நிதி வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்பாடுகள் குறித்துக் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளன.
மேலும், பர்கதுல்லா பல்கலைக்கழக வளாகத்திலேயே அனைத்து வசதிகளும் கொண்ட பெரிய அரங்கம் உள்ளபோதிலும், பட்டமளிப்பு விழாவை வெளியிலுள்ள போபால் ரவீந்திர பவனில் நடத்த ரூ.2 லட்சம் வாடகைச் செலவிடப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தில் சொந்தமாக அரங்கம் இருக்கும்போது, அரசு நிதி மூலம் லட்சக்கணக்கான ரூபாயை வெளியிலுள்ள அரங்கத்திற்குச் செலவழிக்க எந்த அடிப்படையில், எந்த அதிகாரி ஒப்புதல் அளித்தார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த வழக்கில் மிகவும் தீவிரமான விஷயம் என்னவென்றால், பல்கலைக்கழகத்தின் நிதிக் கட்டுப்பாட்டு அதிகாரி இந்த அதிர்ச்சியளிக்கும் கட்டண பில்களுக்குத் தன் எதிர்ப்பைப் பதிவுசெய்த பிறகும், அதை மீறிச் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்களுக்குக் கட்டணம் வழங்கப்பட்டுள்ளது.
இந்தப் பின்னணியில், பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவரும் ஆர்டிஐ ஆர்வலருமான தர்மேந்திர சிங் கெளர் இத்தகவல்களை வெளிக்கொண்டுவந்துள்ள நிலையில், இச்சம்பவம் குறித்து உயர் மட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், அனைத்து பில்களும் மீண்டும் தணிக்கை செய்யப்பட்டுப் பொறுப்பான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கோரியுள்ளார். மேலும், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் இந்த நிகழ்வின் ஒவ்வொரு பைசா செலவுக் கணக்கையும் பகிரங்கமாகப் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட வேண்டும் என்றும், இதன் மூலம் அரசுப் பணம் வீணடிக்கப்படுவதைத் தடுத்துப் பொறுப்புக்கூறலை உறுதிசெய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
