LATEST NEWS
“நடவடிக்கை எடுக்கலைனா ₹50,000 கோடி ஊழல் பழி விழும்..!” CM விஜய்க்கு அன்புமணி ராமதாஸ் விடுத்த அதிரடி எச்சரிக்கை..!!
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை வரையறுப்பதில் தனியார் கட்டுமான நிறுவனங்களுக்குச் சாதகமாக மிகப்பெரிய சூழ்ச்சியும் ஊழலும் நடைபெறுவதாகப் பரபரப்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், நேர்மையான மற்றும் ஊழலற்ற ஆட்சியைத் தருவேன் என்று உறுதியளித்துள்ள முதலமைச்சர் விஜய் இந்த விவகாரத்தில் உடனடியாக நேரடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்தத் திட்டத்தின் பின்னணியில் தனியார் நிறுவனங்களின் நலன்களைப் பாதுகாக்கத் தமிழக அரசின் உயர் அதிகாரி ஒருவரின் நேரடித் தலையீடு இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், இதில் உரிய ஆக்ஷன் எடுக்கப்படவில்லை என்றால் முதலமைச்சர் விஜய் மீது ரூ.50,000 கோடி மெகா ஊழல் என்ற மிகப்பெரிய குற்றச்சாட்டு சுமத்தப்பட நேரிடும் என எச்சரித்துள்ளார்.
அன்புமணி ராமதாஸ் தனது வாதத்தின் போது, முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் இருந்த அதே உயர் அதிகாரிகள்தான் தற்போதைய புதிய தவெக அரசிலும் நீடிக்கிறார்கள் என்பதைச் சுட்டிக்காட்டினார். புதிய அரசாக இருப்பதால், அதிகாரிகள் கண்மூடித்தனமாக வழங்கும் தவறான வழிகாட்டுதல்களுக்கு முதலமைச்சரும் அமைச்சர்களும் பலியாகிவிடக் கூடாது என்றும் அவர் அறிவுறுத்தினார். நடைபாதை என்ற பெயரில் சதுப்பு நிலத்தைப் பிரித்து, பின்னர் அதனை ஆக்கிரமித்துக் கட்டிடங்களை எழுப்பவே இந்த ரூ.70,000 கோடி மதிப்பிலான பெருஞ்சதித் திட்டம் தீட்டப்படுவதாகவும், இதற்கு அனுமதியளித்த வனத்துறை அதிகாரிகளை உடனடியாகப் பணி இடைநீக்கம் செய்ய வேண்டும் என்றும் அவர் கடுமையாக வாதிட்டார்.
