CRIME
“மனைவி ரகசிய ஆடியோவை கணவனிடம் காட்டிய நண்பன்..” மது விருந்தின் போது நடந்த கொடூரக் கொலை.. அதிர்ச்சி பின்னணி..!!
தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் ஏற்பட்ட மோதலைத் தடுக்கச் சென்ற நண்பர் குணசேகரன் (25) என்பவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாரண்டஅள்ளி அருகே ஜக்கசமுத்திரம் கூட்டுரோடு பகுதியைச் சேர்ந்த கல்லூரி பேருந்து ஓட்டுநரான சித்தேஸ்வரன் (27) என்பவரின் மனைவி மகேஸ்வரிக்கும், அவரது நண்பரான சூர்யா (25) என்பவருக்கும் இடையே பள்ளிப் பருவத்திலிருந்தே காதல் இருந்து வந்துள்ளது. திருமணத்திற்குப் பிறகும் சூர்யா மகேஸ்வரியுடன் செல்போனில் பேசி வந்த நிலையில், அது தொடர்பான ஆடியோ பதிவுகளை மற்றொரு நண்பரான குணசேகரன் சித்தேஸ்வரனிடம் கொடுத்துள்ளார். இதனால் இவர்களுக்கிடையே கடுமையான பகை மூண்டுள்ளது.
இந்நிலையில், சி.எம்.புதூர் பகுதியில் இந்த நண்பர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தபோது, சித்தேஸ்வரனுக்கும் சூர்யாவுக்கும் இடையே கள்ளக்காதல் விவகாரம் குறித்து திடீரெனக் கடுமையான வாக்குவாதம் வெடித்து கைகலப்பாக மாறியுள்ளது. அப்போது, சித்தேஸ்வரனைக் கொலை செய்யும் நோக்கில் சூர்யா மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஓங்கியுள்ளார். இந்த மோதலைத் தடுக்கவும் சமாதானம் செய்யவும் இடையில் சென்ற நண்பர் குணசேகரன் மீது கத்திக்குத்து விழுந்ததில் அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் தடுத்த மற்றொரு நண்பரான திருமூர்த்தியும் காயமடைந்து தருமபுரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த கொடூரக் கொலை தொடர்பாக மாரண்டஅள்ளி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வரும் நிலையில், குற்றவாளியான சூர்யா பாலக்கோடு நீதிமன்றத்தில் அதிரடியாகச் சரணடைந்துள்ளார்.
