CRIME
“என்னை யாரோ கொன்னுடுவாங்கமா” நள்ளிரவு 2 மணிக்கு வந்த போன் கால்… காலையில் பெண்கள் விடுதியில் காத்திருந்த அதிர்ச்சி… கதறி துடிக்கும் தாய்..!!
அசாம் மாநிலம் கவுகாத்தி பல்கலைக்கழகத்தில் சமூகவியல் படித்து வந்த 22 வயது மாணவி நிமிஷா தாக்கூரியா, கரால் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் நடந்த அன்று நள்ளிரவு 2 மணியளவில் தனது தாயைத் தொலைபேசியில் தொடர்புகொண்ட நிமிஷா, “என்னை யாரோ கொன்றுவிடுவார்கள்” என்று அழுதுகொண்டே அச்சத்துடன் பேசியுள்ளார். அதன்பிறகு அவரது தொலைபேசி பறிக்கப்பட்டு, தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில், மறுநாள் காலையில் அவர் சடலமாக மீட்கப்பட்டார்.
இந்த மரணம் தொடர்பாக, நிமிஷாவுடன் தங்கியிருந்த அவரது ஆண் நண்பரான 26 வயது அசிப் அலி என்பவரைப் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நிமிஷா தற்கொலை செய்து கொண்டதாக அசிப் அலி கூறிய விளக்கத்தைப் போலீசார் ஏற்க மறுத்துவிட்டனர். சம்பவம் நடந்த இரவில் விடுதி அறையிலிருந்து சத்தமும், அழுகைக் குரலும் கேட்டதாக அங்குள்ள ஊழியர்கள் சாட்சியம் அளித்துள்ளதால், போலீசார் இதனை கொலை என்ற கோணத்தில் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
உயிரிழந்த நிமிஷா இந்து சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், சில அமைப்புகள் இந்தச் சம்பவத்தை “லவ் ஜிஹாத்” என்ற மத ரீதியான கோணத்தில் சித்தரித்துப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இருப்பினும், மாணவியின் உடலில் காயம் அல்லது ரத்தத் தடயங்கள் எதுவும் இல்லாததால், பிரேதப் பரிசோதனை அறிக்கை மற்றும் தடயவியல் ஆதாரங்கள் கிடைத்த பின்னரே மரணத்திற்கான உண்மையான காரணம் தெரியவரும் என்று காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
