LATEST NEWS
“கண் இமைக்கும் நேரத்தில் மரண பயம்..!” ஜவுளி நிறுவன மின்தூக்கி உடைந்து மேலிருந்து கொட்டிய மூட்டைகள்..நடைபாதையில் சென்றவர்களுக்குக் காத்திருந்த பேரதிர்ச்சி… நெஞ்சை உரையவைக்கும் சிசிடிவி காட்சி..!!
துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் உள்ள சுல்தான்காசி பகுதியில், சரக்கு மின்தூக்கியில் கொள்ளளவை விட அதிகமாக ஏற்றிச் செல்லப்பட்ட பொருட்கள் மேலிருந்து கீழே விழுந்ததில், நடைபாதையில் சென்ற பொதுமக்கள் நூலிழையில் உயிர் தப்பிய திடுக்கிடும் சம்பவம் அரங்கேறியுள்ளது. உகுர் மும்கு சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள ஒரு ஜவுளி நிறுவனத்தில், அதன் மின்தூக்கியின் உண்மையான சுமக்கும் திறனை விட மிக அதிகமான அளவில் ஜவுளிப் பொருட்கள் ஏற்றப்பட்டு மேல் தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. மின்தூக்கி மேலே நகர்ந்துகொண்டிருந்தபோது, அளவுக்கு அதிகமான எடையைத் தாங்க முடியாமல் அதிலிருந்த பெரும் அளவிலான பொருட்கள் திடீரென கீழ்நோக்கிச் சரிந்து விழத் தொடங்கின.
பொருட்கள் மேலிருந்து விழத் தொடங்கிய அதே நொடியில், கீழே உள்ள நடைபாதையில் நின்றுகொண்டிருந்த பொதுமக்கள் சிலர், தங்களின் சமயோசித புத்தியால் உடனடியாக விலகி ஓடி அந்தப் பொருட்களின் அடியில் நசுங்குவதிலிருந்து அசாத்தியமாகத் தப்பினர். கண் இமைக்கும் நேரத்தில் ஒரு பெரும் விபத்திலிருந்து பொதுமக்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இந்த நெஞ்சை உரையவைக்கும் நேரடி காட்சிகள் அங்கிருந்த ஒரு வணிக நிறுவனத்தின் பாதுகாப்பு கேமராவில் பதிவாகி, தற்போது சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகின்றன. மின்தூக்கிகளைப் பாதுகாப்பு விதிகளுக்குப் புறம்பாக இயக்குவது எவ்வளவு பெரிய விபரீதத்தை ஏற்படுத்தும் என்பதை உணர்த்தும் ஒரு எச்சரிக்கைப் பதிவாக இச்சம்பவம் விவாதிக்கப்பட்டு வருகிறது.
