LATEST NEWS
“‘ஒரு ஆண் இருந்தா என்ன பிரச்சனை..?” பெண்கள் பெட்டியில் புகுந்த நபருக்கு ஆதரவா..? வைரலாகும் மெட்ரோ வீடியோ..!!
டெல்லி மெட்ரோ ரயில், பயணிகள் பாதுகாப்பாகவும் வசதியாகவும் பயணிப்பதற்கான ஒரு சிறந்த போக்குவரத்தாகக் கருதப்படுகிறது. குறிப்பாக பெண்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு ஒவ்வொரு ரயிலிலும் தனியாகப் பெண்கள் பெட்டிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இருப்பினும், இந்த வசதிக்குப் பிறகும் பெண்கள் பாதுகாப்பு நூறு சதவீதம் உறுதி செய்யப்படவில்லை என்பதை உணர்த்தும் வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. ஆண்களில் சிலர் பெண்கள் பெட்டியில் ஏறுவதோடு மட்டுமல்லாமல், கண்டிக்கப்பட்ட பிறகும் அங்கிருந்து இறங்காமல் பயணத்தைத் தொடர்வது தொடர்கதையாகி வருகிறது.
சமீபத்தில் ‘சிம்ரன் பட்டேல்’ என்ற பெண் பயணி, டெல்லி மெட்ரோவின் பெண்கள் பெட்டியில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றைச் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அதில், ஒரு நபர் தவறுதலாகப் பெண்கள் பெட்டியில் ஏறியிருக்கலாம் என்று கருதினாலும், அடுத்தடுத்து 5 ஸ்டேஷன்கள் கடந்தும் அவர் இறங்கவில்லை. சக பெண் பயணிகள் அவரைத் தட்டிக் கேட்டபோதும், அவர் எதையும் பொருட்படுத்தாமல் அங்கேயே நின்றுகொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் மெட்ரோ ஊழியர் ஒருவர் வந்து அந்த நபரை எச்சரித்து கண்டித்தபோதும், அவர் இறங்காமல் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
https://www.instagram.com/reel/DePAfgzPrwm/?utm_source=ig_web_button_share_sheet
இந்த வீடியோவைச் பகிர்ந்த சிம்ரன், “பெண்கள் பெட்டியில் ஆண்கள் ஏறுவது தினமும் நடக்கும் ஒன்றுதான்” என்று கூறி டெல்லி மெட்ரோ நிர்வாகத்தையும் இதில் டேக் செய்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து பயனர்கள் பலவிதமான கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். சிலர் அந்த நபரின் இந்த அடாவடியான செயலை ‘வெட்கக்கேடானது’ என விவரித்துள்ளனர். அதேவேளையில், சில பயனர்கள் “ஒரு ஆண் கூடவே இருந்தால் பெண்களுக்குப் பாதுகாப்புதானே, இதில் என்ன பிரச்சனை?” என்றும், “ஒரு நபர் அமைதியாகப் பயணம் கூட செய்யக்கூடாதா?” என்றும் அவருக்கு ஆதரவாகப் பதிவிட்டு கருத்து மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
