LATEST NEWS
“தாலாட்டுக்கு பதிலா சண்டை..” குழந்தையின் நலனுக்காக விவாகரத்தை தடுத்து நிறுத்த முடியாது.. உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடித் தீர்ப்பு..!!!
“குழந்தைகளின் நலனுக்காக முறிந்துபோன திருமண உறவை மீண்டும் தொடருமாறு தம்பதியினரை நீதிமன்றம் கட்டாயப்படுத்த முடியாது” என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு மிக முக்கியத் தீர்ப்பை வழங்கியுள்ளது. மனைவிக்கு தேனி குடும்ப நல நீதிமன்றம் விவாகரத்து வழங்கியதை ரத்து செய்யக்கோரி கணவர் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த அதிரடி கருத்தைத் தெரிவித்துள்ளனர்.
நீதிமன்றம் தனது தீர்ப்பில், “குழந்தைகள் வெறும் காற்றை மட்டுமே சுவாசிப்பதில்லை; மாறாக, தன் பெற்றோர்களுக்கு இடையே நிலவும் சுமுகமான சூழ்நிலையையும் சேர்த்துதான் சுவாசிக்கிறார்கள்” என்று நெகிழ்ச்சியூட்டும் வகையில் குறிப்பிட்டுள்ளனர். பெற்றோருக்கு இடையே இணக்கமும், அமைதியும் குறைந்து கருத்து வேறுபாடுகள் ஏற்படும்போது, அந்த வீடு குழந்தைகளுக்கு ஒரு பாதுகாப்பான இல்லமாக இருப்பதில்லை என்றும் நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும், தாலாட்டுப் பாடலுக்குப் பதிலாக பெற்றோரின் தொடர் வாக்குவாதங்களைக் கேட்டு வளரும் குழந்தைகள், இரு மனிதர்களுக்கு இடையே சிக்கித் தவிக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள் என்றும் நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது. பெற்றோரின் கருத்து வேறுபாடுகளால் ஏற்படும் மனரீதியான விளைவுகளைக் குழந்தைகள் சுமக்கும்படி செய்யக்கூடாது என்று கூறி, விவாகரத்தை ரத்து செய்யக் கோரிய கணவரின் மேல்முறையீட்டு மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
