LATEST NEWS
சொந்த வீட்டை காலி செய்யும் முதல்வர் விஜய்..? சென்னையின் மையப்பகுதிக்கு மாறும் ‘பொதிகை இல்லம்…. பின்னணி என்ன..??
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், சென்னையில் உள்ள தனது சொந்த இல்லமான நீலாங்கரையிலிருந்து ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அரசு பங்களாவான ‘பொதிகை இல்லத்திற்கு’ குடிபெயர உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. முதலமைச்சர் தினமும் நீலாங்கரையிலிருந்து கோட்டையில் உள்ள தலைமைச் செயலகத்திற்கு வரும்போது கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்களுக்குச் செல்லும் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வரும் நிலையில், இந்த முடிவை அரசு பரிசீலித்து வருகிறது.
முதலமைச்சரின் நீண்ட தூரப் பயண பாதுகாப்பிற்காகப் பாதையின் இருபுறமும் நூற்றுக்கணக்கான காவலர்கள் நிறுத்தப்பட வேண்டியுள்ளது. இதனால் காவல் நிலையங்களில் வழக்கமான சட்டம்-ஒழுங்கு ரோந்துப் பணிகள் மற்றும் பொதுமக்களின் புகார் விசாரணைகளில் சுணக்கம் ஏற்பட்டு, காவல்துறைக்குக் கடுமையான பணிச்சுமை உருவாகிறது. இதற்குத் தீர்வாக, தலைமைச் செயலகத்திற்கு மிக அருகிலும், உயர் பாதுகாப்பு வளையத்திற்குள்ளும் அமைந்திருக்கும் இந்த அரசு பங்களாவைத் தேர்ந்தெடுக்க அதிகாரிகள் ஆலோசித்துள்ளனர்.
ராஜா அண்ணாமலைபுரம் டி.ஜி.எஸ். தினகரன் சாலையில் அமைந்துள்ள இந்த ‘பொதிகை இல்லம்’, இதற்கு முன் தமிழக அரசின் தலைமைச் செயலாளராகப் பணியாற்றிய வெ. இறையன்பு ஐ.ஏ.எஸ் வசித்த பங்களாவாகும். தற்போது இந்த இல்லத்தில் வர்ணம் பூசுதல், உள் அலங்காரப் புனரமைப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் முழுமையாக முடிந்தவுடன், பாதுகாப்புத் தணிக்கைக்குப் பிறகு முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்ல மாற்ற அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
