LATEST NEWS
“எக்ஸ்பிரஸ்வேயில் பறந்த ஜெட் பிளாக் கார்” அதிவேகமாகச் சென்று கொண்டே வானவேடி ராக்கெட்டுகளை ஏவிய வாலிபர்கள்.. நடுரோட்டில் உயிரைப் பணயம் வைத்து ரீல்ஸ் எடுத்த கொடூரம்..!!
ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள துவாரகா விரைவுச்சாலையில், அதிவேகமாகச் சென்ற காரில் இருந்து வாலிபர்கள் சிலர் ஆபத்தான முறையில் வானவெடிகளைப் பற்றவைத்து வீசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாலிபர்களின் இந்த பொறுப்பற்ற மற்றும் அபாயகரமான செயலால் அந்த சாலையில் சென்ற மற்ற வாகன ஓட்டிகள் பெரும் அதிர்ச்சிக்கும் அவதிக்கும் உள்ளாகினர். பாதுகாப்பு விதிகளைத் தவிடுபொடியாக்கிய இந்தச் சம்பவம் குறித்துத் தற்போது போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சமூக வலைத்தளங்களில் வைரலாகும் அந்த வீடியோவில், கருப்பு நிறத் திரையிடப்பட்ட ஜன்னல்களைக் கொண்ட ஹூண்டாய் கார் ஒன்று விரைவுச்சாலையில் அசுர வேகத்தில் பறப்பது தெரிகிறது. அப்போது காரை ஓட்டும் நபர், ஒரு கையால் ஸ்டீயரிங்கைப் பிடித்துக் கொண்டு, மற்றொரு கையை ஜன்னல் வழியே வெளியே நீட்டி ‘கிராக்கர் கன்’ மூலம் தொடர்ச்சியாக ராக்கெட்டுகளைப் பறக்கவிடுகிறார். அதே நேரத்தில், அவர்களுக்குப் பின்னால் வந்த மற்றொரு காரில் இருந்த நபர் ஒருவர், தனது காரின் சன்ரூஃப் வழியே வெளியே வந்து இந்த ஆபத்தான ஸ்டண்ட்டை வீடியோ எடுத்துள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்துப் பேசியுள்ள காவல்துறையினர், வைரல் வீடியோவின் அடிப்படையில் காரின் பதிவு எண் மற்றும் அதில் பயணித்த வாலிபர்களை அடையாளம் காணும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். அடையாளம் காணப்பட்டவுடன் விதிகளை மீறியதற்காக அவர்கள் மீது மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளனர். இதற்கிடையே, பறந்து சென்ற ராக்கெட்டுகள் ஏதேனும் பிற வாகனங்கள் மீது மோதியிருந்தால் பெரிய விபத்து நேரிட்டிருக்கும் என அப்பகுதி மக்கள் தங்களது அச்சத்தையும் கவலையையும் வெளிப்படுத்தியுள்ளனர்.
