LATEST NEWS
முஸ்தபா ஒன்னும் யோக்கியனும் இல்ல, அரிச்சந்திரனும் இல்ல… ₹30 கோடி குதிரை பேரப் புகாரில் தவெக எம்.எல்.ஏ-வை கிழித்து தொங்கவிட்ட செல்லூர் ராஜூ..!!
தமிழக வெற்றிக் கழகத்தின் மதுரை மத்திய தொகுதி எம்.எல்.ஏ. முஸ்தபா ஒன்றும் யோக்கியனும் இல்லை, அரிச்சந்திரனும் இல்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கடுமையாகச் சாடியுள்ளார். முன்னதாக, தவெக ஆட்சியைக் கெடுப்பதற்காக அதிமுக தன்னிடம் ₹30 கோடி குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக எம்.எல்.ஏ. முஸ்தபா பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில், மதுரை மாநகராட்சி முன்னாள் துணை மேயர் பி.எம். மன்னனை போலீசார் கைது செய்துள்ள சூழலில் செல்லூர் ராஜூ இந்த பதிலை அளித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த செல்லூர் ராஜூ, தவெக எம்.எல்.ஏ. முஸ்தபாவும், கைது செய்யப்பட்டுள்ள அதிமுக நிர்வாகி மன்னனும் நெருங்கிய நண்பர்கள் என்று குறிப்பிட்டுள்ளார். பணம் கொடுத்து எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி, தவெக ஆட்சியைத் தரைமட்டமாக்க வேண்டிய அவசியம் அல்லது எண்ணம் அதிமுகவுக்கு எப்போதுமே இல்லை என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார். மாறாக, தவெகவில் கட்சி நிர்வாகிகள் நியமனத்திற்கு பணம் வாங்குவது தொடர்பாக முஸ்தபாவின் உதவியாளர் பேசிய ஆடியோ செய்திகள் ஏற்கனவே வெளியாகியிருந்ததை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது தமிழகத்தில் நிலவி வரும் கடுமையான விலைவாசி உயர்வு உள்ளிட்ட முக்கிய மக்கள் பிரச்சினைகளை திசைதிருப்புவதற்காகவே தவெக தரப்பில் இதுபோன்ற பொய் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதாக செல்லூர் ராஜூ குற்றம் சாட்டியுள்ளார். மேலும், இந்த வழக்கில் வரும் 7-ஆம் தேதி ஆஜராகுமாறு மன்னனுக்கு சம்மன் அனுப்பிவிட்டு, அதற்கு முந்தைய நாளான 6-ஆம் தேதியே அவசர அவசரமாக போலீசார் அவரைக் கைது செய்துள்ளனர் என்றும், ஒரு பயங்கரவாதியைப் போல அவரை அடைத்து வைத்துள்ளதாகவும் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
